ஆட்டோ டிரைவராக நடிக்க மறுத்தார்: கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் மீது பசில் ஜோசப் குற்றச்சாட்டு
மலையாளத்தில் பசில்ஜோசப் நடிப்பில் வெளியான 'அதிரடி' படம், தமிழில் விரைவில் அதே பெயரில் ரிலீஸ் ஆகிறது. சென்னையில் இன்று நடந்த விழாவில் பசில் ஜோசப் நண்பரும், கிரிக்கெட் வீரருமான சஞ்சு சாம்சன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
விழாவில் பசில் ஜோசப் பேசுகையில், ''அதிரடி என்ற தலைப்பு தமிழ்தான். இந்த படத்தின் தமிழ் டப்பிங்கை நானே முடித்தேன். இதற்காக கொச்சியில் பலர் உதவியுடன் பணியாற்றினோம். நான் மலையாளத்தில் பல படங்களில் நடித்து இருந்தாலும், சென்னையிலும் அதன் தாக்கத்தை உணர முடிகிறது. நான் வெளியே சென்றால் பாசமாக பேசுகிறார்கள், என் படத்தை பலர் பார்த்து ரசித்து இருக்கிறார்கள்.
இந்த படவிழாவுக்கு சஞ்சு சாம்சன் சிறப்பு விருந்தினராக வந்துள்ளார். நானும் அவரும் கொச்சியில் ஒரு அபார்ட்மென்ட்டில் வசித்தோம். இந்த படம் பல நண்பர்களால் இணைந்து உருவாக்கப்பட்டது. மலையாளத்தில் நன்றாக ஓடி வருகிறது தமிழிலும் ரசிப்பார்கள் என நம்புகிறேன். சஞ்சுவை ஒரு கேரக்டரில் நடிக்க அழைத்தோம். அவர் ஆட்டோ டிரைவர் ரோலில் நடிக்கமாட்டேன். அது சின்ன ரோல் என சொல்லிவிட்டார்'' என்றார்.
சஞ்சு சாம்சன் பேசுகையில் ''இந்த படத்தில் என்னை நடிக்க அழைத்தார்கள். அது ஆட்டோகாரர் ரோல் என்றாலும், சின்ன ரோல். அதனால் நடிக்கவில்லை. தமிழகத்தில் ஆட்டோகாரராக நடித்த ரஜினி எப்படி புகழ்பெற்றார் என அனைவருக்கும் தெரியும். திருவனந்தபுரத்தில் நான் வளர்ந்த இடத்தில் தமிழர்கள் அதிகம். நிறைய தமிழ் பேசுவார்கள். சின்ன வயதில் ரஜினி, கமல், விஜய் அண்ணா படம் பார்த்து வளர்ந்தேன். நானும், பசிலும் நண்பர்கள், நான் மேட்ச் விளையாடும்போதும் அதை பார்த்துவிட்டு அவர் போனில் குறை சொல்வார். நான் இந்த படத்தை தமிழ், மலையாளத்தில் பார்த்துவிட்டு குற்றம் கண்டுபிடிக்கப்போகிறேன். அவர் பிஸியான நடிகர், டின்னருக்கு அழைத்தாலும் அதை முன்பே சொல்ல வேண்டும் என்பார். தமிழகத்தில் என் மீது பாசமாக இருக்கிறார்கள். சேட்டா இந்த மேட்ச் ஜெயித்து கொடு என்கிறார்கள். சென்னையில் நாயர் மெஸ்சில் சாப்பிட்டது மறக்க முடியாத அனுபவம். தமிழகம் எனக்கு இன்னொரு வீடு'' என்றார்.