'திரிஷ்யம் 3' ஹிந்தியில் வேறு மாதிரி இருக்கும் ; இயக்குனர் அபிஷேக் பதக்
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான 'திரிஷ்யம்' படமும் அதன் இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. தென்னிந்தியாவைத் தாண்டி பாலிவுட்டிலும் இந்தப் படத்திற்குத் தனி ரசிகர் வட்டம் உருவாகியுள்ளது. அந்த வகையில் ஹிந்தியில் இதன் இரண்டு பாகங்களையும் ரீமேக் செய்து நடித்த நடிகர் அஜய் தேவ்கன், தற்போது இதன் மூன்றாம் பாகத்தில் நடிக்கிறார். தற்போது மலையாளத்தில் இதன் மூன்றாம் பாகம் உருவாகியுள்ளது, வரும் மே 21ம் தேதி இப்படம் ரிலீசாக இருக்கிறது. அதே சமயம் ஹிந்தியில் வரும் அக்டோபர் இரண்டாம் தேதி 'திரிஷ்யம் 3' வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் இப்படம் குறித்து படத்தின் இயக்குனர் அபிஷேக் பதக் கூறும்போது, ''ஹிந்தி ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப கதையிலும் திரைக்கதையிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மலையாளப் பதிப்பு குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பேமிலி டிராமா பாணியில் இருக்கும். ஆனால் ஹிந்தி பதிப்பு வேறுபட்ட திரைக்கதையில் ஹிந்தி ரசிகர்களுக்குப் பிடித்தமான கமர்சியல் பாணியில் இருக்கும்'' என்று கூறியுள்ளார்.