ரேடியோ நாடகத்துக்கு குரல் கொடுத்த மோகன்லால்
கேரளாவில் அகில கேரள வானொலி நாடகத் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. மே 10 முதல் 18 வரை ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் தினமும் இரவு 9:30 மணிக்கு நாடகங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. அதில் 'தெய்வத்தின் மனமாற்றம் கண்டு' என்கிற நாடகம் ஒலிபரப்பாகிறது. இதில் அசோகன் கதாபாத்திரத்திற்கு நடிகர் மோகன்லால் குரல் கொடுத்துள்ளார்.
நிலச்சரிவு மற்றும் இயற்கைச் சுரண்டலைப் பின்னணியாகக் கொண்ட இந்த நாடகத்தில், தற்கொலை செய்துகொள்ள வரும் அசோகன் மற்றும் அங்கிருக்கும் ஒரு மரம் இருவருக்கும் இடையேயான உரையாடலே முக்கிய கதையாகும். திரையுலகில் ஒரு மிகத் திறமையான நடிகராக இருந்தபோதும், வானொலி என்பதால் ஒவ்வொரு வசனத்தையும் மிகச் சரியாகப் பேசவேண்டும் என்பதற்காக பலமுறை டேக் எடுத்து பேசினாராம் மோகன்லால். தனது உடல்நிலை சரியில்லாத போதும் நாடகத்தின் மீதான ஈடுபாட்டால் மோகன்லால் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.