PUBLISHED ON : டிச 28, 2025
வயசு போயாச்சு இனி எதுக்கு இதெல்லாம் என பெரும்பாலான முதியோர் பல ஆசைகளை கூட தவிர்த்து ஏக்கத்திலேயே வாழ்க்கையை கழிக்கின்றனர். பிடித்த ஆடை, பிடித்த உணவு, சுற்றுலா செல்வது போன்றவற்றை ஒதுக்கிவிடுகின்றனர். பிள்ளைகளும் வயதாகிவிட்டது அவர்கள் இதை விரும்ப மாட்டார்கள் என பல விஷயங்களில் வயது முதிர்ந்த பெற்றோரை ஒதுக்கிவிடுகின்றனர். ஆனால், முதுமை வயதில் தான் பல ஏக்கங்கள், ஆசைகள் துளிர் விடும் என்கிறார் மனநல ஆலோசகர் பிரதீபா.
மேலும், அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டதாவது...
என்னிடம் கவுன்சிலிங் வந்த, 60 வயது கணவனை இழந்த மூதாட்டி ஒருவரிடம் பேசிய போது, பல ஆண்டுகளாக ரசகுலா இனிப்பு சாப்பிடவேண்டும் என்றும், சுற்றுலாவுக்கு செல்லவேண்டும் என்றும் ஆசையாம். பிள்ளைகளிடம் கேட்கவும் தயக்கம், வெளியிடங்களுக்கு செல்வதும் இல்லை, அப்படி சென்றாலும் கையில் தனக்கென காசும் இல்லை. பிள்ளைகள் குடும்பத்துடன் செல்லும் போது வயதாகிவிட்டது, சிரமம் வேண்டாம் என வீட்டிலேயே விட்டுச்சென்றுவிடுவார்களாம். அனைத்து வசதியும் வீட்டில் இருந்தாலும் அவரது ஆசைகள் மவுனங்களாக தினமும் கரைந்துவிடுகின்றன. இதுவே பெரும்பாலான வீடுகளில் நடக்கும் நிதர்சன நிலை.
* பொதுவாக, 58-60 வயதில் பணி ஓய்வு என்பதை பலர் தவறாக புரிந்துகொள்கின்றனர். குடும்பம், பிள்ளை, பொருளாதாரம் என ஓடிய கால்கள் தனக்கான தேவையை பூர்த்தி செய்துகொள்ளட்டும், தனது ஆசை, கனவுக்காகவும் ஓடட்டும் என்று ஒரு வயது ஓய்வுக்காக நிர்ணயம் செய்யப்படுகிறது. ஓய்வுக்காலம் எப்படி இருக்கவேண்டும் என்பது அவரவர் விருப்பமாக இருக்கவேண்டும். வீட்டில் நான்கு சுவற்றுக்குள் முடங்கிவிடவேண்டும் என்று அவசியம் இல்லை.
* பல ஆராய்ச்சிகள் , 60 வயதுக்கு மேல் நண்பர்களுடன் பேசவேண்டும், உறவினர்களை பார்க்கவேண்டும், பிடித்த இடத்திற்கு செல்லவேண்டும் என பல ஆசைகள் துளிர்விடுவதை உறுதி செய்கிறது. ஆனால், இந்த வயதில் இதெல்லாம் தேவையா என்ற பேச்சு வந்துவிடுமோ என பயந்து பலர் ஆசைகளை மறைத்துக்கொள்கின்றனர்.
* பல வீடுகளில் பிடித்த உணவுகளை கூட பேரன், பேத்திகளுக்கு கூடுதலாக கொடுத்துவிட்டு சிறு புன்னகையுடன் ஒதுங்கும் தாத்தா, பாட்டிகளை காணமுடியும். முதுமை வயது நமக்கானது என்ற உணர்வு அனைவருக்கும் வரவேண்டியதும் அவசியம். உறவினர்களும் அதை புரிந்துகொண்டு ஊக்கப்படுத்தவேண்டும்.
* பிறந்தநாள், திருமணநாள் கொண்டாட்டங்கள், பண்டிகை கொண்டாட்டங்கள், சுற்றுலா போன்றவற்றில் நம் வீடுகளில் உள்ள முதியவர்களை இணைத்துக்கொள்ளவேண்டும். அவர்கள் வேண்டாம் என்றாலும், அவர்களுக்கான இடத்தையும், மரியாதையும் கொடுக்கவேண்டியது அவசியம்.
* வயதான கணவன்-மனைவி இருக்கும் வீடுகளில் முதியோர்கள் தானே என வீட்டின் ஹாலில் பிள்ளைகள் இடம் கொடுத்துவிடுகின்றனர். இது மிகவும் தவறான ஒன்று. வீட்டில் சூழலுக்கு ஏற்ப, அவர்களுக்கு என ஓர் தனி இடம் கொடுத்துவிடவேண்டும். முதுமை வயதில் செக்ஸ் என்பதை தாண்டிய, பிரைவசி என்பது அவர்களுக்கும் தேவை என பிள்ளைகள் புரிந்துகொள்ளவேண்டும்.
* நம் வயது முதிர்ந்த பெற்றோருக்கு பார்த்து பார்த்து, அனைத்தும் செய்தாலும் அவர்கள் கையில் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை, அவரவர் சக்திக்கு ஏற்ப கொடுத்து பழகுங்கள். சின்ன சின்ன தேவைகளுக்கும் உங்களிடம் கேட்கவேண்டும் என்பது அவர்களின் பெரிய சங்கடமாக இருப்பதால், பலர் கேட்க முன்வருவதில்லை.

