பாடாய்படுத்தும் ஒற்றைத்தலைவலி தப்பிக்க என்ன தான் வழி
பாடாய்படுத்தும் ஒற்றைத்தலைவலி தப்பிக்க என்ன தான் வழி
PUBLISHED ON : டிச 28, 2025

மைக்ரேன் என்பது சாதாரண தலைவலியில் இருந்து மாறுபட்டது; அன்றாட பணிகளை அடியோடு பாதிக்கும். அனுபவிப்பவருக்கு மட்டுமல்ல, உடன் இருப்பவர்களுக்கும் அதுபற்றி தெரிய வேண்டும் என்கிறார் டாக்டர் பத்மராணி.
மைக்ரேன் என்பது என்ன?
ஒரு வகையான தலைவலி.ஒற்றை தலைவலி என்பார்கள். தாங்க முடியாத அளவுக்கு பாடாய்படுத்தி விடும்.எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது. தலையின் ஒரு பக்கம் முழுவதும் கடுமையாக வலிக்கும். அந்த இடத்தில் ரத்த குழாய்களில் ரத்தம் செல்வதையும் கூடுவதையும் குறைவதையும் துல்லியமாக உணரமுடியும். சாதாரண தலைவலிக்கான சிகிச்சை இதற்கு பலன் தராது.
மைக்ரேன் ஏன் ஏற்படுகிறது?
மனஅழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள், துாக்கமின்மை, உணவு தவிர்ப்பு, காலநிலை மாற்றம், புகைபிடித்தல், அதிக ஒளி, இடைவிடாத சத்தம் ஆகியவை இந்த வகை தலைவலிக்கு தூண்டுதல்கள். உரிய நேரத்தில் உணவு சாப்பிடாமல் விடுவது, போதுமான தண்ணீர் குடிக்காமல் இருப்பது, ஒரே விஷயத்தை விடாமல் யோசித்து குழப்பிக் கொள்வது போன்ற காரணங்களும் உண்டு. ஒவ்வொருவரின் சூழலுக்கு ஏற்ப காரணங்களும் மாறுபடும்.
ஆரா என்பது என்ன?
மைக்ரேன் தொடங்குவதற்கு முன் அறிகுறிகள் தெரியும். சிலருக்கு கண் பார்வை மாறுதல், உடல் பகுதி மரத்துப் போவது, பேசுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தோன்றும். இதையே 'ஆரா' என்கிறோம். இதை உடனே உணர்ந்து, என்ன பிரச்னையோ அதை சரிசெய்தால் மைக்ரேன் வராமல் தவிர்க்கலாம்.
மைக்ரேன் வலி எவ்வளவு நேரம் இருக்கும்?
சிலருக்கு சில மணி நேரம் நீடிக்கும். சிலருக்கு சில நாட்கள் தொடரலாம். பொதுவாக காலை உணவுக்கு பிறகு மெதுவாக தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, நண்பகலில் உச்சத்தை எட்டும். அதன் பின் படிப்படியாக குறைந்து, மாலைக்குள் சுத்தமாக நின்றுவிடும். சிகிச்சை எடுக்காவிட்டால், இதே பாணியில் பல நாட்கள் தொடரலாம். சிலருக்கு வாந்தி வந்தால் சரியாகி விடும். சிலருக்கு துாங்கினால் சரியாகும். ஆனால், தூக்கம் வராது. மாதக்கணக்கில் கூட மாத்திரைகள் தொடர்ந்து எடுக்க நேரலாம்.
இதில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது உண்மையா?
உண்மை. மாதவிடாய், மெனோபாஸ் சமயங்களில் ஹார்மோன் மாற்றங்களால்பலருக்கு ஏற்படுகிறது.
மைக்ரேனுக்கு நிரந்த தீர்வு என்பது உள்ளதா?
அலோபதியில் மாத்திரைகள் தற்காலிக நிவாரணம் அளிக்கும். அறுவை சிகிச்சை செய்யலாம். எந்த நரம்பில் பாதிப்பு உள்ளதோ அதை நீக்கி மாற்று வழி ஏற்படுத்தப்படும்.
வேறு மருத்துவமுறைகளில் நிரந்தர தீர்வு கிடைப்பதாக சிலர் சொல்வதுண்டு. ஒவ்வொருவருக்கும் பாதிப்பை பொறுத்து சிகிச்சையின் தன்மை மாறுபடும். என்ன சிகிச்சை எடுத்தாலும் வலியை துாண்டும் காரணிகளை கண்டறிந்து எதிர்கொண்டால் மட்டுமே மேலும் வராமல் தடுக்க முடியும்.
டாக்டர் பத்மராணி
கோவை அரசுமருத்துவமனை
9952891794
padmarani795@gmail.com

