துவரம் பருப்பு, முட்டை, பால் எது அலர்ஜியை ஏற்படுத்தும்?
துவரம் பருப்பு, முட்டை, பால் எது அலர்ஜியை ஏற்படுத்தும்?
PUBLISHED ON : டிச 28, 2025

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, குறிப்பிட்ட பருவ காலத்தில் மட்டுமே சைனஸ் பிரச்னை வருவதைப் பார்த்தோம். இன்று எல்லாப் பருவத்திலும் சைனஸ் பாதிப்பு உள்ளது.
குறிப்பாக நகரங்களில், சைனஸ் பிரச்னை அதிகம்.
காரணம், எங்கு பார்த்தாலும் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடக்கின்றன; வாகனப் புழுதியும் அதிகம்.
இப்பிரச்னை பற்றி நிறைய குழப்பங்கள் உள்ளது. என்னிடம் நோயாளி வரும் போதே, சார் தொற்று இருந்தது. கடையில் நானே ஆன்டிபயாடிக் மருந்து வாங்கி சாப்பிட்டேன் என்று சொல்வர்.
ஆனால் எல்லா சைனசும் தொற்று கிடையாது.
ஒவ்வாமை பிரச்னையால் தான் பெரும்பாலும் சைனஸ் ஆரம்பித்து, தொடர்ந்து நீடிக்கும்.
இதற்கு ஆன்டிபயாடிக், ஆன்டிவைரல் மருந்துகள் எந்த விதத்திலும் பலன் தராது. அலர்ஜியால் எற்பட்ட சைனஸ் பிரச்னைக்கு அதை துாண்டிய காரணி எது என்பதை கண்டறிந்து, அதை தவிர்க்க வேண்டும்.
உதாரணமாக துாசி, புழுதி தான் பிரச்னைக்கு காரணம் என்றால், துாசி இருக்கும் இடங்களுக்கு செல்வதற்கு முன் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும். வெளியில் சென்று விட்டு வீட்டிற்குள் நுழைந்ததும் படுக்கையில் படுப்பதோ, சோபாவில் அமர்வதோ கூடாது. உடுத்தி இருந்த துணிகளை லாண்டரி பையில் போட்டு விட்டு, சுத்தமாக குளித்த பின், தான் படுக்கவோ, உட்காரவோ செய்ய வேண்டும்.
படுக்கை விரிப்பு, திரை சீலைகள் உட்பட அனைத்தையும் வழக்கத்தை விடவும் சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
நேசல் ஹைஜீன்
பல் துலக்குவது, குளிப்பது போன்று மூக்கை சுத்தம் செய்ய 'நேசல் வாஷ் கிட்' என்ற உபகரணம் கடைகளில் கிடைக்கும். அலர்ஜி தன்மை இருப்பவர்கள், துாசு, மாசு அதிகம் உள்ள இடங்களில் வேலை செய்பவர்கள், இதை உபயோகிக்கலாம்.
கிடைக்காத பட்சத்தில், 50 எம்எல் சிரஞ்சில் ஊசியை அகற்றி விட்டு, மருத்துவமனையில் பயன்படுத்தும் சலைன் வாட்டரை நிரப்பி, மூக்கின் உள்ளே செலுத்தி சுத்தம் செய்யலாம்.
எந்தப் பிரச்னையும் இல்லாதவர்கள், சுத்திகரிக்கப்பட்ட , 250 மில்லி குடிநீரில் ஒரு சிட்டிகை உப்பு கலந்து மூக்கை சுத்தம் செய்யலாம்.
நம் நாட்டில், எட்டில் ஒருவர் சைனசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கு 40 சதவீதம் மாசு, புழுதி தான் காரணம்.
ஆஸ்துமா கோளாறு முதலில் சைனஸ் பிரச்னையாகத் தான் ஆரம்பிக்கும்.
சுவாசப் பாதையின் கீழ் பகுதியில் ஏற்படும் அலர்ஜியை ஆஸ்துமா என்கிறோம்.
இயற்கையில் ஒரு சுவாசப் பாதை தான் உள்ளது. நம் புரிதலுக்காக மேல், கீழ் என்று பிரித்து சொல்கிறோம்.
ஆஸ்துமாவிற்கு என்று தனியாக சிகிச்சை இல்லை. அலர்ஜிக்கு தான் சிகிச்சை செய்ய முடியும்.
ரத்தப் பரிசோதனையின் போது, இம்யூனோகுளோபுலின் என்ற வேதிப்பொருள், அதிக மாக இருப்பது தெரிந்தால், ஏதோ ஒரு வெளிப்புற காரணியின் துாண்டுதல் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
இப்பரிசோதனையில், மூக்கு, வாய் வழியாக நுழையும் காற்று, உணவுப் பொருட்களில், எது நமக்கு அலர்ஜியை ஏற்படுத்துகிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
துவரம் பருப்பு, பால் பொருட்கள், முட்டை என்று எது வேண்டுமானாலும் அலர்ஜியை ஏற்படுத்தலாம்.
டாக்டர் கார்த்திக் மாதேஷ் ஆர், இயக்குநர், காது, மூக்கு, தொண்டை பிரிவு, சிம்ஸ் மருத்துவமனை, சென்னை 94009 33973karthikmadesh@kotmail.com

