ADDED : செப் 18, 2025 07:42 AM

தசரா விடுமுறை நெருங்குகிறது. குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாட எங்கு செல்லலாம் என, பெங்களூரு மக்கள் தேடுகின்றனர். கல்லுாரிகளுக்கும் விடுமுறை என்பதால், மலையேற்றம் செல்ல மாணவர்கள் திட்டமிடுகின்றனர். இவர்களுக்கு ஸ்கந்தகிரி பெஸ்ட் சாய்ஸ். ஒரு முறை சென்று பாருங்கள். வாழ்க்கையில் அந்த அனுபவத்தை மறக்கவேமாட்டீர்கள்.
சிக்கப்பல்லாபூர் நகரின், இயற்கையின் மடியில் ஸ்கந்தகிரி அமைந்துள்ளது. இதை பூலோக சொர்க்கம் என, கூறலாம். இயற்கை கொட்டி கிடக்கும் அற்புதமான இடமாகும். கடல் மட்டத்தில் இருந்து, 4,429 அடி உயரத்தில் ஸ்கந்த மலை உள்ளது.
இங்கு திப்பு சுல்தான், ஆங்கிலேயரை எதிர்த்து போராட கட்டிய கோட்டையும் உள்ளது, இயற்கை ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், சாகசம் செய்வதில் ஆர்வம் காட்டும் இளசுகளுக்கு, தகுதியான இடமாகும். ஸ்கந்தகிரி சுற்றுலா தலம் மட்டுமல்ல, வரலாற்று சிறப்புமிக்க புண்ணிய தலமாகவும் விளங்குகிறது.
இரவு நேரத்தில், பலரும் ஸ்கந்தமலையில் மலையேற்றம் செய்வதை விரும்புகின்றனர். சுற்றிலும் அழகான காட்சிகள், அமைதியான சூழ்நிலையில் நடந்து செல்வது, மிகவும் அற்புதமான அனுபவமாக இருக்கும். நான்கைந்து மணி நேரத்தில், 8 கி.மீ., தொலைவு பயணம் செய்து மலை உச்சியை அடையலாம். இங்கிருந்து பார்த்தால், கண்களுக்கும், மனதுக்கும் இனிமையான காட்சிகள் தென்படும்.
மலையேறிச் செல்லும்போது, மேகத்தில் மிதந்து செல்வதை போன்ற உணர்வு ஏற்படும். சிலுசிலுவென உடலை வருடி செல்லும் இதமான குளிர்க்காற்று, உடலுக்கும், மனதுக்கும் உற்சாகத்தை அளிக்கும்.
பனிக்காலத்தில் ஸ்கந்தகிரியை பார்க்கும்போது, பச்சை நிறப் புள்ளிகள் நிறைந்த, வெள்ளை நிற போர்வை போர்த்தியதை போன்றிருக்கும். மலையில் 'வியூ பாயின்ட்' உள்ளது. இங்கிருந்து பார்த்தால், அற்புதமான காட்சியை காணலாம். மலையேறும்போது குடிநீர், உலர்ந்த பழங்கள், எலக்ட்ரால், குளிர்பானங்கள் கொண்டு செல்வது நல்லது.
எப்படி செல்வது?
சிக்கபல்லாபூர் மாவட்டத்தின், பல்லாரிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை அருகில், ஸ்கந்தகிரி உள்ளது. பெங்களூரில் இருந்து 70 கி.மீ., தொலைவில், ஸ்கந்த மலை உள்ளது. அனைத்து நகரங்களில் இருந்தும், சிக்கபல்லாபூருக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. வாடகை வாகனங்கள் வசதியும் உள்ளது.
விமானத்தில் வருவோர், பெங்களூரின், சர்வதேச விமானநிலையத்தில் இறங்கி, வாடகை வாகனம் அல்லது பஸ்சில் ஸ்கந்தகிரிக்கு செல்லலாம்.
மலைக்கு செல்ல நேரம் கட்டுப்பாடு எதுவும் இல்லை. எந்த நேரத்திலும் செல்லலாம். ஆனால் வனத்துறையிடம் முறைப்படி அனுமதி பெறுவது கட்டாயம்.
- நமது நிருபர் -