/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
மலையேற்றத்துக்கு ஏற்ற துமகூரின் சின்னக பெட்டா
/
மலையேற்றத்துக்கு ஏற்ற துமகூரின் சின்னக பெட்டா
ADDED : செப் 18, 2025 07:46 AM

மலையேற்றத்தில் விருப்பம் உள்ளவர்களுக்கு, பெங்களூரில் இருந்து இரண்டு மணி நேர தொலைவில் உள்ள சின்னக பெட்டா சிறந்த இடமாகும்.
துமகூரு நகரின் புறநகர் பகுதிகள் அதன் பசுமை, ஏரிகள், கரடுமுரடான மலைகளுக்கு பெயர் பெற்றவை. திம்லாபுராவின் மைய பகுதியில் 1,256 மீட்டர் கொண்ட சின்னக பெட்டா, மலையேற்றத்துக்கு சிறந்த இடமாகும்.
பெங்களூரு நகரில் இருந்து இரண்டு மணி நேர பயண துாரத்தில் அமைந்துள்ளது. சிறிது செங்குத்தான பகுதிகள் இருந்தாலும், நீங்கள் அதை அதிக சிரமமின்றி நிர்வகிக்கலாம்.
சொந்த வாகனங்களில் வருவோர், மலை அடிவாரத்தில் நீலகிரி தைலத் தோப்பில், நிறுத்திவிட்டு நடந்து செல்ல வேண்டும். மண் சாலையாக இருப்பதால் நடந்து செல்வதே சிறந்தது. சிறிது துாரம் நடந்து சென்றால், இடது புறம் சிறிய ஹனுமன் கோவில் உள்ளது. ஹனுமனை வணங்கிவிட்டு, தொடரலாம்.
சிறிது துாரத்தில் ரங்கநாத சுவாமி கோவில் உள்ளது. அங்கு வனத்துறை செக்போஸ்ட் அமைந்திருக்கும். அங்கு உங்களின் விபரங்களை பதிவு செய்த பின், அவர்கள் அனுமதியுடன் செல்ல வேண்டும்.
பின் அங்கிருந்து நடந்து சென்றால், இடதுபுறத்தில் மற்றொரு சிறிய கோவில் உள்ளது. இக்கோவிலின் வலதுபுறம் வழியாக மலையேற்றத்தை தொடங்கலாம்.
செல்லும் வழியில், ஸ்வந்தேனஹள்ளி கட்டே என்ற இடத்தில் மலைகளின் பின்னணியில், சிறிய ஏரி அமைந்துள்ளது. இங்கு மயில்களையும், அதன் சத்தத்தையும் கேட்கலாம்.
நீங்கள் செல்லும் பாதையில் இருபுறமும் பசுமையாக இருக்கும். அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்லும் நிலையை நமக்கு ஏற்படுத்தும்.
மலை உச்சிக்கு முன்னதாக, பண்டாரவரா எனும் அகலமான வெட்டவெளி வரும். இங்கிருந்து திம்லாபுரா வனம், சுற்றி உள்ள தாவரங்கள், ஏரிகள், கிராமங்களின் அழகிய காட்சிகளை காணலாம். அங்கிருந்து அடர்ந்து வனப்பகுதி வழியாக செல்ல வேண்டும்.
இறுதியாக செங்குத்தான இரு பாறைகளின் இடையே உள்ள சிறிய பாதையில் ஊடுருவி செல்ல வேண்டும். அவ்வாறு சென்ற பின், மற்றொரு பாறை தென்படும்.
இதன் வழியாகவே நீங்கள் செல்ல வேண்டும். நீங்கள் ஏறுவதற்கு வசதியாக, அங்கு கயிறும் கட்டி வைத்துள்ளனர். இதன் வழியாக ஏறினால், மலையின் உச்சியை அடைந்துவிடுவீர்கள்.
அங்கிருந்து 360 டிகிரி கோணத்தில், திம்லாபுரா மற்றும் தேவராயண துர்காவை சுற்றி உள்ள வனப்பகுதிகளை பார்க்கலாம். இவை அனைத்தையும் 2 முதல் 3 மணி நேரத்துக்குள் பார்த்து விடுவீர்கள்.
காலை 6:00 மணிக்கு செல்ல வேண்டுமானால், வனத்துறையின் https://aranyavihaara.karnataka.gov.in இணையதளத்தில், ஒரு நாள் முன்னதாக முன்பதிவு செய்ய வேண்டும்.
எப்படி செல்வது?
n பெங்களூரில் இருந்து இருசக்கர வாகனம், காரில் செல்வோர், ஸ்வந்தேனஹள்ளி கிராமத்திற்கு செல்லுங்கள். அங்கிருந்து நடந்து செல்ல வேண்டும்.
n பஸ்சில் செல்வோர், துமகூருக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ள ஸ்வந்தேனஹள்ளிக்கு உள்ளூர் பஸ், டாக்சியில் செல்லலாம்.
� சின்னக பெட்டாவின் பண்டாரவரா பகுதி. � மலை உச்சியில் இருந்து தென்படும் பசுமையான காட்சிகள்.
- நமது நிருபர் -