/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
அரிய வகை பறவைகளை ரசிக்க கூடவி சரணாலயம்
/
அரிய வகை பறவைகளை ரசிக்க கூடவி சரணாலயம்
ADDED : செப் 18, 2025 07:40 AM

கர்நாடகாவின் மலைநாடு மாவட்டம் என்று அழைக்கப்படும் ஷிவமொக்காவில், சக்ரபைலு யானைகள் முகாம், கொடசாத்ரி மலையேற்றம், ஜோக் உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இதுபோன்று சுற்றுலா பயணியர் ஷிவமொக்கா சென்றால், மறக்காமல் செல்லும் இடமாக, கூடவி சரணாலயம் உள்ளது.
சொரப்பில் உள்ள இந்த சரணாலயம், வெளிநாடுகளில் இருந்து வலசை வருபவை உட்பட 217 பறவைகளின் தாயகமாக உள்ளது. கிரே ஹெரான், நைட் ஹெரான், லிட்டில் கார்மோரண்ட், கிரே ஜங்கிள்பவுல், இந்தியன் பான்ட் ஹெரான், டர்டர், இந்தியா ஷாக், லிட்டில் கிரேப், வெள்ளை ஐபிஸ், பிராக்மினி கைட் உள்ளிட்ட அரிய வகை பறவைகளை இங்கு கண்டு ரசிக்கலாம்.
கூடவி ஏரிக்கரையில் 0.75 சதுர கி.மீ.,க்கும், அதிகமான பரப்பளவில் பரந்து விரிந்துள்ள, இந்த சரணாலயத்திற்குள் செல்லும் போதே, பறவைகளின் கீச்... கீச்... சத்தம், சுற்றுலா பயணியரை கவர்ந்து இழுக்கிறது. ஒவ்வொரு பறவைகளாக கண்டு ரசிக்கும்போது மனதிற்கு அமைதி, மகிழ்ச்சியான அனுபவம் கிடைக்கிறது.
சரணாலயத்தின் இயற்கையான அழகு, சுற்றுலா பயணியரை கவர்ந்து இழுக்கிறது. அதிலும் மழைக்காலத்தில் பச்சை பசேலென காட்சி அளிக்கும் சரணாலயத்தை பார்ப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
இயற்கையின் மடியில் அமர்ந்து இருப்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தும். ஜூன் முதல் டிசம்பர் வரை சுற்றிப்பார்க்க ஏற்ற மாதங்கள் என்று, இங்கு சுற்றுலா வருவோர், தங்கள் கருத்துகளை பகிர்ந்து உள்ளனர். இந்த காலக்கட்டத்தில் வலசை பறவைகள் இங்கு வருவது அதிகமாக இருக்கும்.
இங்கிருந்து ஜோக் நீர்வீழ்ச்சி 43 கி.மீ., கெலாடி நீர்வீழ்ச்சி 38 கி.மீ., துாரத்தில் உள்ளன. முருடேஸ்வரா 125 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது.
எப்படி செல்வது?
பெங்களூரில் இருந்து கூடவி 396 கி.மீ., துாரத்திலும், சொரப்பில் இருந்து 16 கி.மீ., துாரத்திலும் உள்ளது. மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து சொரப், சாகருக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களில் சென்று அங்கிருந்து கூடவி செல்லலாம். சரணாலயத்தில் இருந்து ஹூப்பள்ளி விமான நிலையம் 140 கி.மீ., துாரத்திலும், மங்களூரு விமான நிலையம் 245 கி.மீ., துாரத்திலும் உள்ளது. பெங்களூரில் இருந்து ரயிலில் சென்றால், சாகர் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து, வாடகை காரில் கூடவி செல்ல முடியும்.
- நமது நிருபர் -