/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
காபி பொடி மூலம் நினைவுக்கு வரும் சக்கம்மா
/
காபி பொடி மூலம் நினைவுக்கு வரும் சக்கம்மா
ADDED : டிச 08, 2025 05:45 AM

- நமது நிருபர் -
இந்தியாவில் காபி உற்பத்தியில் கர்நாடகாவின் குடகு முதலிடத்தில் உள்ளது. இங்கிருந்து 70 சதவீதம் காபி உற்பத்தி செய்யப்படுகிறது. கர்நாடகாவில் பல பிராண்ட் காபி பொடி விற்பனை செய்யப்பட்டாலும், 'சக்கம்மா பில்டர் காபி'க்கு என்று தனி சுவை உள்ளது. காபி பிராண்டிற்கு சக்கம்மா என்று பெயர் வர காரணத்தை பார்க்கலாமா.
துமகூரின் பிடாரே கிராமத்தில், 1880ல் பிறந்தவர் சக்கம்மா. இவர் இளம்பெண்ணாக இருந்த போது, இவரது பெற்றோர் பிழைப்பு தேடி பெங்களூருக்கு குடிபெயர்ந்தனர். கல்வி மீது அதிக ஆர்வம் கொண்டிருந்த சக்கம்மாவுக்கு, நன்றாக படித்து சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது.
இருப்பினும் சில சூழ்நிலைகளால், 16 வயதிலேயே திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலை சக்கம்மாவுக்கு ஏற்பட்டது. இவரது கணவர் குடகை சேர்ந்த காபி தோட்ட உரிமையாளர் தொட்டமனே சிக்கபசப்பா ஷெட்டி. அவருக்கு ஏற்கனவே இரண்டு மனைவியர் இருந்த போதிலும், மூன்றாவதாக சக்கம்மாவை திருமணம் செய்தார்.
திருமணமான இரண்டே ஆண்டுகளில் கணவர் இறந்துவிட, அவரது காபி தோட்டத்தை பராமரிக்கும் பொறுப்பு, சிறுமியான சக்கம்மா மீது விழுந்தது. நஷ்டத்தில் இயங்கிய காபி தொழிலை தனது கடின உழைப்பு மூலம் முன்னுக்கு கொண்டு வந்தார்.
காபி தொழிலை விரிவுபடுத்த கடந்த 1920ல் பெங்களூரு குடிபெயர்ந்தார். பசவனகுடி புல் டெம்பிள் சாலை அருகே காபி பதப்படுத்தப்படும் கடையை திறந்தார். அங்கிருந்து விற்பனை செய்த காபி பவுடருக்கு நல்ல மவுசு கிடைத்தது. அவரது பெயரும், புகழும் நகரம் முழுதும் பரவியது.
பெண்கள் தொழில் முனைவோராக மாற வேண்டும் என்ற நோக்கில், பெங்களூரு நகரின் பல இடங்களில் காபி தயாரிக்கும் மையங்களை அமைத்து பெண்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்தார். இதன்மூலம் 'காபி பொடி சக்கம்மா' என்ற புனைப்பெயர் அவருக்கு கிடைத்தது.
காபி தொழிலில் கொடிகட்டி பறந்ததால், 1928ல் மைசூரு பிரதிநிதிகள் சபைக்கு தேர்வானார். இந்த சபைக்கு தேர்வான முதல் பெண் என்ற பெருமையை பெற்றார். காபி தொழிலில் பல சாதனைகள் புரிந்த சக்கம்மா, 1950ம் ஆண்டு தனது 75 வயது வயதில் இறந்தார். அவர் இறந்து தற்போது 75 ஆண்டுகள் ஆனாலும், சக்கம்மா காபி பொடி மூலம் ஒவ்வொரு வீட்டிலும் நினைவு கொள்ளப்படுகிறார்.

