/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
55 நாட்களில் நெல் அறுவடை செய்யும் விவசாயி மஞ்சுளா
/
55 நாட்களில் நெல் அறுவடை செய்யும் விவசாயி மஞ்சுளா
55 நாட்களில் நெல் அறுவடை செய்யும் விவசாயி மஞ்சுளா
55 நாட்களில் நெல் அறுவடை செய்யும் விவசாயி மஞ்சுளா
ADDED : டிச 08, 2025 05:45 AM

- நமது நிருபர் -
தாவணகெரே சென்னகிரி தாலுகா, வெங்கடேஸ்வரபுரா கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுளா, 32; விவசாயி. இவர் விவசாயத்தில் பல புதுமைகளை செய்து வருகிறார். பொதுவாக நெல்லை பயிரிட்டு அறுவடை செய்வதற்கு 120 நாட்கள் ஆகும். ஆனால், மஞ்சுளாவோ 'நவரா' எனும் நெல் ரகத்தை, உரங்களின் உதவியுடன் வெறும் 55 நாட்களில் அறுவடை செய்து வருகிறார்.
இது மற்ற விவசாயிகளை ஆச்சரியப்படுத்தியது. அவரிடமிருந்து, பல நுணுக்கங்களை மற்றவர்கள் கேட்டு அறிந்தனர். எப்படி இது சாத்தியம் என பலரும் வியப்புடன் பார்த்தனர். தனது விவசாய முறை குறித்து அவர்களுக்கு விளக்கினார்.
இதை கேட்ட மற்றவர்கள் அசந்தனர். ஒரு பெண்ணாக இருந்து கொண்டு, விவசாயத்தில் அசத்துகிறாரே என பிரமித்தனர்.
இப்படி பலரும் தன்னை பார்த்து மூக்கின் மீது கை வைக்கும் படி விவசாயத்தில் அசத்தி வருகிறார் மஞ்சுளா.
இதனாலே, மற்ற பெண்களும் இவரின் தோட்டத்தில் வந்து வேலை செய்ய விரும்புகின்றனர். அவரின் திறமைகளை ஆர்வமாக கேட்கின்றனர். அவரும் சலிக்காமல் மற்றவர்களுக்கு கற்று கொடுத்து வருகிறார்.
இது குறித்து, மஞ்சுளா கூறியதாவது:
'நவரா' நெல் ரகம், இரண்டரை ஏக்கரில் பயிரிடப்படுகிறது. வீட்டிலே உரம் தயாரிக்கிறேன்.
இந்த நெல் பயிருக்கு அதிக தண்ணீர் தேவையில்லை. தற்போது, நெல் அறுவடைக்கு தயாராக உள்ளது. இம்முறை 40 மூட்டை நெல் அறுவடை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வகை நெல், மார்க்கெட்டில் கிலோ, 180 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதன் மூலம் நல்ல லாபம் ஈட்டி வருகிறேன். என் இரு மகள்களையும் படிக்க வைக்கிறேன். இந்த ரக நெல் ஹைதராபாத், ஆந்திரா, தார்வாட், ராய்ச்சூர், தெலுங்கானா போன்ற இடங்களுக்கு செல்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரது மகள் சுஷ்மா, 15, கூறியதாவது:
என் அம்மா ஒரு கடுமையான உழைப்பாளி. எங்களுக்கு நல்ல கல்வியை தந்து உள்ளார்.
விவசாய வேலைகளுக்கு நாங்களும் உதவி செய்து வருகிறோம். நெல் அறுவடை, மூட்டை கட்டுவது போன்றவற்றில் பிரதான பங்களிப்பை தருகிறோம். மாநிலத்தின் பல பகுதிகளிலும், எங்கள் அம்மா பயிர் செய்த நெல்லை அரிசியாக்கி பயன்படுத்துவது பெருமையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

