/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
பெண்களுக்கு ஊக்கமாக திகழும் குப்பை வாகன ஓட்டுநர் நந்தினி
/
பெண்களுக்கு ஊக்கமாக திகழும் குப்பை வாகன ஓட்டுநர் நந்தினி
பெண்களுக்கு ஊக்கமாக திகழும் குப்பை வாகன ஓட்டுநர் நந்தினி
பெண்களுக்கு ஊக்கமாக திகழும் குப்பை வாகன ஓட்டுநர் நந்தினி
ADDED : டிச 08, 2025 05:44 AM

- நமது நிருபர் -
வாழ்க்கையில் கட்டாய சூழ்நிலை ஏற்பட்டாலோ அல்லது வாய்ப்பு கிடைத்தாலோ, பெண்கள் தங்களுக்குள் மறைந்துள்ள மன உறுதியை வெளிப்படுத்துவர். வாழ்க்கை எனும் வண்டியை ஓட்ட வேண்டிய கட்டாயத்தில் சிக்கி திணறும் பெண்களுக்கு, மன திடம் அதிகம் இருக்கும். அவர்களாலும் குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும். இதற்கு சிறந்த உதாரணம் நந்தினி.
சிக்கபல்லாபூர் நகரின், திப்பேனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் நந்தினி. 28. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன.
தன்னம்பிக்கை குடும்பம் நிம்மதியாக வாழ்ந்த நிலையில், இவரது கணவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. பல மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார்.
அதன்பின் குழந்தைகளை வளர்ப்பது, குடும்ப நிர்வகிப்பு பொறுப்பு நந்தினியிடம் வந்தது. கணவரை இழந்தாலும் தைரியம், தன்னம்பிக்கையை இழக்கவில்லை. தன் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக, உழைக்க தீர்மானித்தார். என்ன வேலை செய்யலாம் என ஆலோசித்தார்.
அதன்பின் ஓட்டுநராக முடிவு செய்தார். நந்தாதீபா சுய உதவிக்குழு சங்கத்தின் உதவியுடன், ஒரு மாதம் ஓட்டுநர் பயிற்சி பெற்றார். சங்கத்தினரே லைசென்ஸ் எடுத்து தந்தனர்.
பயிற்சி முடிந்த பின், கிராம பஞ்சாயத்தின் துப்புரவு வாகன ஓட்டுநராக பணிக்கு நியமிக்கப்பட்டார்.
மாதந்தோறும் 10,000 ரூபாய் ஊதியம் பெறுகிறார்.
கணவர் திடீரென காலமானாலும், ஓரமாக முடங்கி கிடக்காமல், யாரையும் சார்ந்திராமல் தனக்கென ஒரு வழியை தேடிக்கொண்டது. மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது. பொதுவாக குப்பை வாகன ஓட்டுநராக முன் வரும் பெண்களின் எண்ணிக்கை குறைவு.
இவரை பாராட்டி, கிராம வளர்ச்சி துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கூறுகையில், ''நந்தினியின் வாழ்க்கை, மற்ற பெண்களுக்கு உந்துதலாக இருக்கும்.
மனம் தளராதீர் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட துயரங்களை பார்த்து அஞ்சாமல், தன்மானத்துடன் வாழ்க்கையை அமைத்து கொண்டார். கிராமத்தை துாய்மையாக வைத்து கொள்வதில், முக்கிய பங்கு வகிக்கிறார். மற்ற பெண்களும் இவரை போன்று, மனோ திடத்துடன் வாழ வேண்டும். இவரால் பல பெண்கள், வாகன ஓட்டுநராக முன் வருகின்றனர்,'' என்றார்.
நந்தனி கூறுகையில், ''இதற்கு முன் நான் கூலி வேலை செய்தேன். கணவர் திடீரென இறந்ததால், குடும்ப பொறுப்புகளை நான் சுமக்க வேண்டி வந்தது. என் குடும்பத்தை நடத்த கூலி வேலை மட்டும் போதுமானதாக இல்லை. என் இரண்டு குழந்தைகளை வளர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
''என் நிலையை அறிந்து, கிராம பஞ்சாயத்து அதிகாரிகள், என்னை குப்பை அள்ளும் வாகன ஓட்டுநராக தேர்வு செய்தனர்.
''நந்தாதீபா மகளிர் சுய உதவிக்குழுவினர், எனக்கு இலவசமாக ஓட்டுநர் பயிற்சி அளித்து, லைசென்ஸ் பெற்று கொடுத்தனர். நான் நல்ல முறையில் வாழ, கிராம பஞ்சாயத்தும், சுய உதவிக்குழுவும் காரணம். கணவரை இழந்துவிட்டால் பெண்கள் மனம் தளரக்கூடாது. தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும்,'' என்றார்.

