நேபாள பிரதமர் பதவி பறிபோனதற்கான காரணம்: சர்மா ஒலி புலம்பல்
நேபாள பிரதமர் பதவி பறிபோனதற்கான காரணம்: சர்மா ஒலி புலம்பல்
UPDATED : செப் 10, 2025 11:21 PM
ADDED : செப் 10, 2025 11:19 PM

காத்மாண்டு: நேபாள பிரதமர் பதவியில் இருந்து விலகியதற்கு அயோத்தி கோயிலுக்கு எதிரான நிலைப்பாடு, லிபுலேக் பிரச்னை ஆகியவையே காரணம் என பிரதமர் பதவியில் இருந்து விலகிய கே.பி.சர்மா ஒலி கூறியுள்ளார்.
சமூக வலைதளங்கள் மீதான தடை, நாட்டில் நிலவிய ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு எதிராக கோபம் அடைந்த மாணவர்கள் நேபாளத்தில் போராட்டத்தில் இறங்கினர். அவர்களின் போராட்டத்தை ராணுவத்தாலும், போலீசாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. அதிபர், பிரதமர் மற்றும் அமைச்சர்களின் இல்லங்கள் தீவைக்கப்பட்டன. பல அமைச்சர்கள் , முன்னாள் பிரதமர்கள் மாணவர்களின் தாக்குதலுக்கு உள்ளானார்கள். இதனால் அந்நாட்டு அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோர் பதவி விலகினர்.
பிரதமர் பதவியில் இருந்து விலகிய கே.பி.சர்மா ஒலி ராணுவ பாதுகாப்பில் உள்ளார். அவர் கட்சியின் பொதுச்செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: லிபுலெக் பிரச்னையை உரிமை கொண்டாடாமல் இருந்து இருந்தால் நான் பதவியில் நீடித்து இருந்திருப்பேன். கடவுள் ராமர் குறித்து நான் தெரிவித்த கருத்தால் எனது பதவி பறிபோனது எனத் தெரிவித்துள்ளார்.
நமது அண்டை நாடான நேபாளம் சிக்கிம், மேற்கு வங்கம், பீஹார், உபி மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களுடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. உத்தரகாண்டின் லிபுலெக் பகுதியை நேபாளம், ' எங்களுக்கு சொந்தமானது' என உரிமை கொண்டாடி வருகிறது. இதனை மத்திய அரசு நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.