துவாரபாலகர் தங்க கவசத்தை கழற்றியது ஏன்? சபரிமலை சர்ச்சை: பதில் அளிக்க தேவசம் போர்டுக்கு கோர்ட் உத்தரவு
துவாரபாலகர் தங்க கவசத்தை கழற்றியது ஏன்? சபரிமலை சர்ச்சை: பதில் அளிக்க தேவசம் போர்டுக்கு கோர்ட் உத்தரவு
ADDED : செப் 10, 2025 11:39 PM

கொச்சி: சபரிமலை பிரதான சன்னிதானத்தில் அய்யப்ப சுவாமி சன்னிதான வாயிலில் சுவாமியின் பாதுகாவலர்களான துவாரபாலகருக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கமுலாம் பூசப்பட்ட செப்பு கவசங்களை அனுமதியில்லாமல் கழற்றியதற்காக கேரள உ யர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
சென்னைக்கு அனுப்பப்பட்ட அந்த கவசங்களை திரும்ப பெற்று வரும்படியும் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலின் மண்டல பூஜை காலம் அடுத்த இரு மாதங்களில் துவங்கவுள்ளது.
இதையடுத்து, கோவிலில் பராமரிப்பு பணிகளை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தீவிரப்படுத்தியுள்ளது.
செப்பு கவசங்கள் அதன் ஒரு பகுதியாக, சபரிமலை சன்னிதியில், சோபான படிகளுக்கு முன்பாக இரு புறமும் உள்ள துவாரபாலகர்களுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கமுலாம் பூசப்பட்ட செப்பு கவசங்களை பழுது பார்க்க போர்டு முடிவு செய்தது.
அந்த கவசங்களை கழற்றி, நன்கொடையாக வழங்கிய நிறுவனத்திடமே பழுது பார்க்க ஒப்படைப்பதற்காக சென்னைக்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில், கேரள உயர் நீதிமன்றத்தால் சபரிமலைக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு ஆணையர், 'நீதிமன்றத்தின் முன் அனுமதி இல்லாமல், துவாரபாலகர் கவசங்கள் அகற்றப்பட்டது' எனக் கூறி, அறிக்கை தாக்கல் செய்தார்.
இதை பரிசீலித்த கேரள உயர் நீதிமன்றம், சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட துவாரபாலகர் கவசங்களை உடனடியாக திரும்ப கொண்டு வரும்படி திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு உத்தரவிட்டது.
விதிமீறல் மேலு ம், முன் அனுமதி பெறாமல், கவசத்தை அகற்றியது விதிமீறல் என்றும் தேவசம் போர்டை கடிந்து கொண்டது.
நீதிமன்றத்தின் அனுமதி பெற போதிய கால அவகாசம் இருந்தும், தேவசம் போர்டு அதை ஏன் செய்யவில்லை? என கேள்வி எழுப்பி, நாளைக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
துவாரபாலகர் கவசங்கள் கழற்றப்பட்டது சர்ச்சையான நிலையில், இது குறித்து தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறியதாவது:
கோவில் தந்திரி மற்றும் போர்டில் உள்ள முக்கிய அதிகாரிகளின் ஆலோசனைக்குப் பிறகே துவாரபாலகர்கள் கவசத்தை பழுது பார்க்க முடிவு செய்யப்பட்டது.
கவசத்தை நன்கொடையாக வழங் கிய சென்னையில் உள்ள நிறுவனத்திடமே பழுது பார்க்கவும் அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த கவசங்களை திருவாபரண பெட்டிக்கு பொறுப்பு வகிக்கும் தேவசம் போர்டு கமிஷனர், கோவில் பொற்கொல்லர், போலீஸ் எஸ்.ஐ., உள்ளிட்ட பிரதிநிதிகளே சென்னைக்கு எடுத்துச் சென்றனர். சோபான படிகளில் உள்ள கவசங்களையும் தாந்த்ரீக முறைப்படி பழு து பார்க்க வேண்டியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.