இந்திய மாணவர்களை நிராகரிக்கும் கனடா: 80% விசா விண்ணப்பங்கள் நிராகரிப்பு
இந்திய மாணவர்களை நிராகரிக்கும் கனடா: 80% விசா விண்ணப்பங்கள் நிராகரிப்பு
UPDATED : செப் 10, 2025 09:55 PM
ADDED : செப் 10, 2025 09:51 PM

ஒட்டாவா: கனடாவில் படிக்க விண்ணப்பித்த 80 சதவீத இந்திய மாணவர்களின் விசா விண்ணப்பங்களை கனடா அரசு நிராகரித்துள்ளது.
வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவர்களின் முதன்மையான விருப்பத் தேர்வாக கனடா இருக்கும். அங்கு படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் 40 சதவீதம் பேர் இந்திய மாணவர்களாக இருப்பார்கள். கடந்த 2024ம் ஆண்டு மட்டும் 1.88 லட்சம் மாணவர்கள் அந்நாட்டிற்கு படிக்க சென்றனர். இது அதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளை காட்டிலும் 2 மடங்கு அதிகம் ஆகும். இதற்கு, உலகத் தரமான கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்புகள் ஆகியவை முக்கிய காரணமாக அமைந்து இருந்தது.
ஆனால், தற்போது அந்நாட்டில் வீடுகள் பற்றாக்குறை, போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லாதது மற்றும் உள்ளூர் மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற குரல் அந்நாட்டில் வலுத்து வருகிறது.
இதனையடுத்து விசா விதிமுறைகளை அந்நாடு கடுமையாக்கி வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டுக்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.
இந்நிலையில், இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு முடிவில் இந்திய மாணவர்களின் விசா விண்ணப்பங்களை அந்நாடு நிராகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. 80 சதவீத இந்திய மாணவர்களின் விசா கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. கனடாவின் இந்த முடிவால் ஆசியா, ஆப்ரிக்கா கண்டங்களை சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.மேலும், கனடாவின் விசா பெறுவதற்கு தேவையான நிதி ஆதாரம் இரு மடங்காக ரூ.13.13 லட்சம் ஆக அதிகரித்ததுடன், பணி தொடர்பான விதிமுறைகளை கடுமையாக்கி உள்ளது.மேலும், 2025 ல் 4.37 லட்சம் மாணவர்களை மட்டும் அனுமதிப்பது என அந்நாடு முடிவு செய்துள்ளது.
ஜெர்மனியை நோக்கி
இந்நிலையில், சர்வதேச மாணவர்களின் கவனம் ஜெர்மனியை நோக்கி திரும்பி உள்ளது. அந்நாட்டின் வலிமையான பொருளாதாரம், அரசு உதவியுடன் செயல்படும் பல்கலை மற்றும் ஆங்கில வழி கல்வி ஆகியன இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. இதனால், அந்நாட்டுக்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 2023 ல் 49,500 மாணவர்கள் சென்ற நிலையில், இந்தாண்டு 60 ஆயிரம் மாணவர்கள் ஜெர்மனிக்கு சென்றுள்ளனர்.