இனப்பெருக்கத்தை தடுக்க வேண்டுமே தவிர எல்லா நாய்களையும் கொல்ல நினைப்பது தவறு கால்நடை மருத்துவர்கள் கருத்து
இனப்பெருக்கத்தை தடுக்க வேண்டுமே தவிர எல்லா நாய்களையும் கொல்ல நினைப்பது தவறு கால்நடை மருத்துவர்கள் கருத்து
UPDATED : ஆக 15, 2025 03:39 AM
ADDED : ஆக 15, 2025 12:33 AM

சென்னை:“நாய்க்கடியில் இருந்து மனிதர்களை பாதுகாக்க, 'ரேபிஸ்' நோய் குறித்து, பள்ளி அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
' 'நாய்களுக்கு 'ஆன்டி ரேபிஸ்' தடுப்பூசியை, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை செலுத்துவதுடன், இதே காலக்கட்டத்தில், அவற்றுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையையும் செய்ய வேண்டும்,” என, சென்னை நியூ கார்னர் ஸ்டோன் பல்நோக்கு கால்நடை மருத்துவமனை நிறுவனர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் ஆர்.சொக்கலிங்கம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
நாய்க்கடி அதிகரிக்கிறது என்பதை காரணம் காட்டி, அனைத்து நாய்களையும் கொல்ல நினைப்பது தவறு. சாலையில் விபத்து நடக்கிறது என்பதற்காக, அனைத்து சாலைகளையும் மூடுவது எப்படி தீர்வாகும்?
எல்லா வகை நாய் கடித்தாலும் பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்படுவது கிடையாது. தெருவில் செல்லும் நாயை கல்லால் அடிப்பது போன்ற துன்புறுத்தும் செயல்களில் ஈடுபடும்போது தான், வெறி உணர்வு ஏற்பட்டு, மனிதர்களை கடிக்க முயற்சிக்கிறது. ஆனால், நாய் கடித்தால் முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
'ரேபிஸ்' தொற்று உள்ள நாய் கடித்தால் தான் மனிதர்கள் உயிரிழக்க நேரிடும். வெறி பிடித்தால் மட்டும் தான் நாய் கடிக்கும்.
நாய்க்கடியில் இருந்து பாதுகாக்க, ரேபிஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். குறிப்பாக பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டும். தன்னார்வ நிறுவனங்கள் வாயிலாக, நாய்களை முறையாக கணக்கெடுத்து, 'ஆன்டி ரேபிஸ்' தடுப்பூசி செலுத்த வேண்டும். இந்த தடுப்பூசியை, ஆண்டுக்கு ஒருமுறையாவது தவறாமல் நாய்களுக்கு செலுத்துவது அவசியம்.
இது தவிர, நாய்களுக்கு இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கை வேண்டும். இதற்கு, ஒவ்வொரு பகுதியிலும் சுற்றித்திரியும் நாய்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கருத்தடை செய்ய வேண்டும்.
அதாவது, ஒரு பகுதியில் 100 நாய்கள் இருக்கின்றன என்றால், அதில், 60 நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும். அப்போது தான், நாய்கள் இனப்பெருக்கம் கட்டுப்பாட்டில் இருக்கும்.
ஆனால், ஒவ்வொரு பகுதியிலும், 10 சதவீத நாய்களுக்கு கூட முறையாக கருத்தடை செய்வதில்லை. இதுவே, நாய் இனப்பெருக்கம் அதிகரிப்புக்கு முக்கிய காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரேபிஸ் தடுப்பூசி கட்டண விபரம்: கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் செயல்படும் கால்நடை மருத்துவமனைகளில், ரேபிஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது.
சென்னை, வேப்பேரி கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில், 'ரேபிஸ்' தடுப்பூசிக்கு 120 ரூபாயும், அனுமதி சீட்டுக்கு 100 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
தனியார் கால்நடை மருத்துவமனைகளில், 'ரேபிஸ்' தடுப்பூசிக்கு, 250 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கட்டணம் பெறப்படுகிறது.
கருத்தடை அறுவை சிகிச்சை கட்டணம்: அரசு கால்நடை மருத்துவமனைகளில், நாய்களுக்கு, 75 ரூபாய்க்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. வேப்பேரி கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில், ஆண் நாய்க்கு கருத்தடை செய்ய, 500 ரூபாயும், பெண் நாய்க்கு, 1,500 ரூபாயும் கட்டணம் பெறப்படுகிறது.
தனியார் கால்நடை மருத்துவமனைகளில், கருத்தடை அறுவை சிகிச்சைக்கு, 2,500 ரூபாய் முதல் 3,500 ரூபாய் வரை கட்டணம் பெறப்படுகிறது.