விவசாயிகளிடம் லஞ்சம் வாங்குவதா? தமிழக அரசுக்கு அன்புமணி சாபம்
விவசாயிகளிடம் லஞ்சம் வாங்குவதா? தமிழக அரசுக்கு அன்புமணி சாபம்
ADDED : செப் 11, 2025 02:55 AM

சென்னை: 'தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், 100 கிலோ நெல்லுக்கு 275 ரூபாய் லஞ்சம் வாங்கப்படுகிறது' என, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், 40 கிலோ நெல் மூட்டைக்கு, 60 ரூபாய் லஞ்சம் வாங்கும் பணியாளர்கள், மூட்டைக்கு ௨ கிலோ நெல்லை குறைத்து, கணக்கு காட்டுகின்றனர். அதனால், 100 கிலோ நெல்லுக்கு 150 ரூபாய் லஞ்சமும், 125 ரூபாய் மதிப்புள்ள ௫ கிலோ நெல்லை, விவசாயிகள் வழங்க வேண்டி உள்ளது.
நுாறு கிலோ நெல்லுக்கு, தமிழக அரசு 131 ரூபாய் ஊக்கத்தொகை வழங்குகிறது. ஆனால், நெல் கொள்முதல் நிலையங்களில், 100 கிலோ நெல்லுக்கு, 275 ரூபாய் லஞ்சம் வசூலிப்பதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். இது தமிழக அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகையை விட இரு மடங்காகும்.
லஞ்சம் கொடுக்காவிட்டால், ஈரப்பதம் அதிகம் உள்ளிட்ட காரணங்களை கூறி, நெல்லை கொள்முதல் செய்ய, பணியாளர்கள் மறுத்து விடுகின்றனர். அதனால், லஞ்சம் கொடுப்பதைத் தவிர, விவசாயிகளுக்கு வேறு வழியே இல்லை.
விவசாயிகளிடம் பெறப்படும் லஞ்சம், உயர் அதிகாரிகள் வரை பகிர்ந்து கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. வறுமையில் வாடும் விவசாயிகளிடம், லஞ்சம் பெறுவதை விட, பெரும் பாவமும், குற்றமும் இருக்க முடியாது. இதை தி.மு.க., அரசும் தடுப்பதில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.