'டிஜிட்டல் அரஸ்ட்' என மிரட்டி அரசு அதிகாரியிடம் ரூ.90 லட்சம் 'அபேஸ்'; மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
'டிஜிட்டல் அரஸ்ட்' என மிரட்டி அரசு அதிகாரியிடம் ரூ.90 லட்சம் 'அபேஸ்'; மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
ADDED : டிச 27, 2025 10:29 PM

திருச்சி: 'டிஜிட்டல் அரெஸ்ட்' என அரசு அதிகாரியை மிரட்டி, 90 லட்சம் ரூபாயை மோசடி செய்த மர்ம நபர்களை, போலீசார் தேடுகின்றனர்.
திருச்சியை சேர்ந்த அரசு அதிகாரி ஒருவருக்கு, மொபைல் போனில் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், 'டில்லியில் இருந்து, போலீஸ் அதிகாரி பேசுகிறேன். இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஒரு முக்கிய புள்ளியிடம் இருந்து, ஏ.டி.எம்., கார்டுகள் கைப்பற்றப்பட்டன.
'அதில், உங்களின் ஏ.டி.எம்., கார்டு இருப்பதால், உங்களை 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்ய போகிறோம். கைது செய்யாமல் இருக்க, உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை, நாங்கள் கூறும் வங்கி கணக்குக்கு அனுப்புங்கள். விசாரணைக்கு பின், பணம் விடுவிக்கப்படும்' என மிரட்டினார்.
பயந்து போன அரசு அதிகாரி, 90 லட்சம் ரூபாயை, மர்ம நபர் குறிப்பிட்ட வங்கிக்கணக்குக்கு அனுப்பினார். அதன் பின், ஏமாற்றப்பட்டதை உணர்ந்தவர், திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

