விவசாயிகளுக்கு உதவ மாநிலம் முழுதும் 1,000 மையங்கள்! : அரசு முடிவு
விவசாயிகளுக்கு உதவ மாநிலம் முழுதும் 1,000 மையங்கள்! : அரசு முடிவு
UPDATED : டிச 28, 2025 12:00 AM
ADDED : டிச 27, 2025 11:37 PM

சென்னை : தமிழகத்தில் 1,000 இடங்களில் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கும் திட்டத்தை, தமிழக அரசு நேற்று துவக்கியுள்ளது. இதன் வாயிலாக, விவசாயிகளுக்கு உடனுக்குடன் உதவ திட்டமிடப்பட்டு உள்ளது. வேளாண் பட்டதாரிகள் வாயிலாக, இந்த மையங்களை, அரசு நேரடி கண்காணிப்பில் நடத்தவுள்ளது. மாநிலம் முழுதும், வேளாண் பட்டம் மற்றும் பட்டய படிப்பு முடித்த பட்டதாரிகள் பலர் உள்ளனர். வேளாண் துறை, வேளாண் தொடர்பான நிறுவனங்களில் மட்டுமின்றி, படிப்புக்கு தொடர்பில்லாத அலுவலகங்கள், தொழிற்சாலைகளிலும் இவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அனுமதி ஆணை
இவர்களின் படிப்பறிவு மற்றும் தொழில்நுட்ப திறன்களை, விவசாயிகள் மற்றும் விவசாய பொருட்கள் உற்பத்தி உயர்வுக்கு பயன்படுத்த, அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக, உழவர் நல சேவை மையங்கள் திறக்கப்படும் என, நடப்பாண்டு வேளாண் பட்ஜெட்டில், துறை அமைச்சர் பன்னீர் செல்வம் அறிவித்திருந்தார்.
அதன்படி, மாநிலம் முழுதும், 1,000 உழவர் நல சேவை மையங்கள் அமைக்கும் திட்டம் நேற்று துவங்கப்பட்டு உள்ளது. அதில், நேற்று மட்டும் 611 மையங்கள் திறக்கப்பட்டு விட்டன. மீதமுள்ள மையங்கள், ஓரிரு நாளில் துவக்கப்பட உள்ளன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். 1,000 வேளாண் பட்டதாரிகளுக்கு, உழவர் நல சேவை மையம் அமைப்பதற்கான அனுமதி ஆணைகளை வழங்கினார்.
உழவர் நல சேவை மையங்களில், விவசாயத்திற்கு தேவையான விதைகள், உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. பயிர்களில் ஏற்படும் பூச்சி நோய் மேலாண்மை உள்ளிட்ட தேவைகள் குறித்தும், விவசாயி களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.
இதற்காக, வேளாண் பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு 10 முதல் 20 லட்சம் ரூபாய் வரை வங்கி கடன் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இந்த மையங்களை துவக்க, மொத்த செலவில் 30 சதவீதம் மானியமும் வேளாண் துறை வழங்கிஉள்ளது.
சுய வேலைவாய்ப்பு
அதன்படி, ஒரு உழவர் நல சேவை மையத்திற்கு, 3 முதல் 6 லட்சம் ரூபாய் வரை மானியமாக கிடைக்கும். இதற்காக, 42 கோடி ரூபாயை வேளாண் துறைக்கு அரசு வழங்கிஉள்ளது.
இத்திட்டத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, மேலும் பல உழவர் நல சேவை மையங்கள், அடுத்தாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு திறக்கப்பட உள்ளன.
இது குறித்து, வேளாண் துறை செயலர் தட்சிணாமூர்த்தி கூறியதாவது:
தமிழகத்தில் ஆண்டுதோறும் 4,000 வேளாண் பட்டதாரிகளும், 600 வேளாண் பட்டயதாரிகளும் வேளாண் கல்வியை நிறைவு செய்கின்றனர். எனவே, உழவர் நல சேவை மைய திட் டம் வாயிலாக, இவர்களுக்கு சுய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன.
வேளாண் இடு பொருட்கள், தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் அனைத்து விதமான
சேவைகளையும், ஒரே குடையின் கீழ் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு, இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
முதல் கட்டமாக, 611 பயனாளிகளுக்கு உழவர் நல மையங்கள் அமைக்க, மாநில அளவிலான தேர்வு குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இவர்களுக்கு விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்வதற்கான உரிமங்கள் வழங்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள பயனாளிகளுக்கு, தேர்வு குழு ஒப்புதல் பெற்று, ஓரிரு நாளில் அனைத்து உரிமங்களும் வழங்கப்படும்.
உழவர் நல சேவை மையம் நடத்தவுள்ள பட்டதாரிகளுக்கு, முதல் கட்டமாக கடந்த 22ம் தேதி ஒருநாள் பயிற்சியும் வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

