UPDATED : செப் 11, 2025 12:00 PM
ADDED : செப் 11, 2025 06:47 AM

சென்னை: 'தமிழகத்தில், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திண்டுக்கல்லில், 8 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, திருச்சி மாவட்டம் துறையூர், திருப்பத்துார் மாவட்டம் ஆலங்காயத்தில், தலா, 7 செ.மீ., மழை பெய்துள்ளது. தெற்கு ஒடிஷா - வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் மீது, ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தமிழகத்தில் ஒரு சில பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும், நாளையும் இடி மின்னல் மற்றும் பலத்த தரைக்காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்களில் சில இடங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், சில இடங்களில், இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும். சில இடங்களில், இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.