ADDED : செப் 11, 2025 06:59 AM

தெற்கு ஆசியாவில் இலங்கை மற்றும் வங்கதேச அரசுகள் கவிழ்க்கப்பட்டது போலவே, தற்போது நேபாள அரசும் மக்கள் புரட்சியால் கவிழ்க்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அங்கு அரசியலில் புதிய எதிர்காலம் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
முதலாவதாக கவனம் பெறுவது, காத்மாண்டு சுயேச்சை மேயர் பாலேந்திரா ஷாவின் எழுச்சி. புரட்சிகரமான பேச்சு, அடிமட்ட மக்கள் மீதான அக்கறை உள்ளிட்ட குணங்கள், இளைஞர்கள் மத்தியில் பாலேந்திரா ஷாவை கொண்டு சேர்த்திருக்கிறது.
அரசியலில் பாலேந்திரா ஷா ஏற்படுத்திய எழுச்சி, வாரிசு அரசியலை விலக்கி வைத்து பொறுப்பான, வெளிப்படைத் தன்மை நிரம்பிய அரசியலை அடுத்த தலைமுறைக்கு கடத்தி இருக்கிறது.
சவால்கள்
பாலேந்திர ஷா நேபாளத்தின் பிரதமராக பதவியேற்றால், அவருக்கு ஏராளமான சவால்கள் காத்திருக்கின்றன. முடங்கிப் போன பார்லிமென்டை பழைய அரசின் விசுவாசிகள், அரசியலில் வலுவாக ஊறிப் போன அறிவுஜீவிகள் என பல தடைகளை அவர் சந்திக்க வேண்டி இருக்கும்.
மோசமான ஆபத்து
மற்றொரு சூழ்நிலை இதை விட ஆபத்தானது; அது ராணுவத்தின் தலையீடு. வன்முறையாளர்களை அடக்க நேபாளம் முழுதும் தற்போது ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். மக்களை அமைதி பாதைக்கு திருப்பும் முயற்சியில் அவர்கள் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றனர்.
எனினும் நேபாள அரசியல் சாசனத்தின்படி, உள்நாட்டில் புரட்சியோ, மிகப் பெரிய அளவிலான போராட்டமோ வெடித்தால், எந்த நிலையிலும் ராணுவம் குறுக்கிட முடியும். தற்போது நேபாளத்தின் அரசியல் வெற்றிடமாக இருக்கும் சூழலில், ராணுவத்திடம் ஆட்சி கைமாறி இருப்பதும், மோசமான ஆபத்தாகவே பார்க்கப்படுகிறது.
மீண்டும் மன்னராட்சி
இந்த குழப்பங்களுக்கு நடுவே, பழைய பூதம் ஒன்று மீண்டும் கிளம்பி இருக்கிறது. அது, 2008ல் முடிவுக்கு வந்த மன்னராட்சியை மீண்டும் அமல்படுத்துவது. மன்னர் ஆட்சிக்கான ஆதரவு குழுக்கள், இந்த புரட்சியை பயன்படுத்தி, மக்கள் மத்தியில் செல்வாக்கை அறுவடை செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. சர்வாதிகாரம் நிறைந்திருந்தாலும், மன்னராட்சியின் போது அரசியல் ஸ்திரத்தன்மை இருந்ததாக, ஆதரவு குழுக்கள் பிரசாரம் செய்து வருகின்றன.
முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷா, 'மீண்டும் மன்னராட்சி மூலமே அரசியல் ஸ்திரதன்மையை நிலைநாட்ட முடியும்' என, ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். மீண்டும் மன்னராட்சி மலர்வது என்பது சாத்தியம் இல்லாதது என்றாலும், சோர்வை ஏற்படுத்திய ஜனநாயக ஆட்சிக்கு பதிலாக மன்னராட்சி எவ்வளவோ மேல் என்ற வகையில் சிறிய பட்டாசை தன் பங்குக்கு அவரும் கொளுத்தி போட்டு இருக்கிறார்.
நேபாளத்தில் தற்போது நடக்கும் கலவரங்களுக்கு காரணம் வெறும் உள்நாட்டு பிரச்னை என கருதிவிட முடியாது. அதையும் கடந்து சர்வதேச அரசியலின் தலையீடும் இருக்கிறது.
அதற்கு ஒரு தீப்பொறியாக பயன்படுத்தப்பட்டது தான் சமூக ஊடகங்கள் மீதான தடை. போதாக்குறைக்கு சமூக ஊடகங்கள் மீதான தடையை எதிர்த்து, இளைஞர்கள் மேற்கொண்ட பிரசாரமும் அரசு மீதான கோபத்தை மக்களிடையே அதிகப்படுத்தி, தெருக்களில் இறங்கி போராட வைத்திருக்கிறது.
அதன் விளைவாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அங்கு கவிழ்ந்திருக்கிறது. வீதிகள் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன. எங்கு பார்த்தாலும் பதற்றம் நிலவுகிறது. அரசு இயந்திரங்கள் செயல்படாமல் முடங்கி இருக்கின்றன.
வாரிசு அரசியல்
இந்த புரட்சி முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்துமா? அல்லது மீண்டும் ஒரு ஸ்திரமற்ற அரசாட்சிக்கு வித்திடுமா என்பது அடுத்து அமையப் போகும் அரசின் கைகளில் தான் இருக்கிறது. தவிர, 'நேப்போகிட்ஸ்' எனப்படும் வாரிசு அரசியல் அமைப்பை முற்றிலும் அழிப்பதற்கான துணிச்சல் புதிய அரசுக்கு இருக்குமா என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறது.
இந்தப் போராட்டங்கள் ஒன்றை மட்டும் உறுதிபடுத்தியுள்ளது. அது அரசியல்வாதிகள் ஊழல்களை, வாரிசு அரசியலை மக்கள் ஏற்கவில்லை. திறமையான ஆட்சியாளர்களே தேவை என்பதை, இளம் தலைமுறையினர் போராட்டத்தின் மூலம் சுட்டிக் காட்டியுள்ளனர்.
-நமது சிறப்பு நிருபர்-