ஜெர்மன் முதலீட்டை முந்தியது உள்நாட்டு முதலீடு: முதல்வர் பெருமிதம்
ஜெர்மன் முதலீட்டை முந்தியது உள்நாட்டு முதலீடு: முதல்வர் பெருமிதம்
ADDED : செப் 12, 2025 12:38 AM

ஓசூர்:''ஜெர்மன், பிரிட்டன் பயணத்தை முடித்து விட்டு, 15,516 கோடி ரூபாய் முதலீட்டுடன் தமிழகத்திற்கு திரும்பினேன். அதன் பின், மூன்றாவது நாளில் ஓசூரில் நடக்கும் இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறேன்.
''இன்றைய மாநாட்டில், 24,000 கோடி ரூபாய் முதலீடுகள் கையெழுத்தாகின்றன. நம் சாதனையை நாமே முந்துகிறோம்,'' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில், 'தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு - 2025' நேற்று நடந்தது.
இதில், 24,307 கோடி ரூபாய் முதலீட்டில், 49,353 பேர் வேலைவாய்ப்பை பெறும் வகையில், 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நேற்று கையெழுத்தாகின.தொழில் துறை அமைச்சர் ராஜா வரவேற்றார்.
மாநாட்டுக்கு தலைமை வகித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
ஜெர்மனி, பிரிட்டன் பயணத்தை முடித்து விட்டு, 15,516 கோடி ரூபாய் முதலீட்டுடன் தமிழகத்திற்கு திரும்பினேன்.
அதன் பின், மூன்றாவது நாளில் ஓசூரில் நடக்கும் இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறேன். இன்று இங்கு நடக்கும் மாநாட்டில், 24,000 கோடி ரூபாய் முதலீடுகள் கையெழுத்தாகின்றன.
நம் சாதனையை நாமே முந்துகிறோம். அதுமட்டுமல்ல, 8,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் 1,210 கோடி ரூபாய் முதலீட்டில், நான்கு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன்.
தமிழக தொழில் வரைபடத்தில், தனித்த அடையாளம் பெற்ற நகரம் ஓசூர். இந்தியாவை கடந்து, உலகளவில் கவனத்தை ஈர்க்கும் நகரமாக ஒளி வீசுகிறது.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு, 11.19 சதவீதத்தை தொட்டுள்ளது.
இந்த வளர்ச்சியை இன்னும் அதிகரிக்க, முதலீட்டாளர்கள் மாநாடுகள், முதலீட்டாளர்கள்
சந்திப்புகளை தொடர்ச்சியாக நடத்தி வருகிறோம். தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், 77 சதவீதம் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.
ஸ்டாலின் என்ற பெயருக்கு, 'மேன் ஆப் ஸ்டீல்' -என்று பொருள். உறுதியோடு சொல்கிறேன். எக்கு போன்ற உறுதியுடன் என் இலக்குகளில் வெற்றி பெறுவேன். எம்.எஸ்.எம்.இ., துறை சார்பில் வரும் அக்., 9 மற்றும் 10ம் தேதிகளில், கோவையில், உலக புத்தொழில் மாநாடு நடக்கிறது.
உலகம் முழுதுமிருந்து வரும் தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், இன்குபேட்டர்கள், புத்தொழில் முனைவோர் ஆகியோரை, ஒருங்கிணைக்கும் வரலாற்று சிறப்பு மிக்க இந்த மாநாடு, 'ஸ்டார்ட்-அப்' செக்டாரில், தமிழகத்தின் வளர்ச்சியை உலகிற்கு பறைசாற்றும். தமிழகம் முன்னேற உங்கள் பங்களிப்பு எந்நாளும் அவசியம்.இவ்வாறு, அவர் பேசினார்.