/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உற்பத்தி செலவு குறைக்க வேளாண் துறை யோசனை
/
உற்பத்தி செலவு குறைக்க வேளாண் துறை யோசனை
ADDED : செப் 12, 2025 12:39 AM
பல்லடம்; விதைகளின் முளைப்புத் திறனை அறிந்தால், உற்பத்திச் செலவை பெருமளவு குறைக்கலாம் என, விவசாயிகளுக்கு, பல்லடம் வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
பல்லடம் விதைப்பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் வளர்மதி கூறியதாவது: நெல் விதைகளை அறுவடைக்குப்பின் சேமித்து வைத்து அதனை அடுத்த பருவத்தில் மீண்டும் விதையாக பயன்படுத்துவது விவசாயிகளிடையே நடைமுறையில் உள்ளது. 50 சதவீத விவசாயிகள் தங்கள் சொந்த விதை சேமிப்பிலிருந்தே அடுத்த பருவத்துக்கு விதை நெல்லை பயன்படுத்துகின்றனர்.
விதைப்புக்கு முன், விதையின் முளைப்புத்திறன் அறிந்து விதைப்பு செய்வது மிகவும் சிறந்தது. முளைப்புத்திறன் அறியாமல் விதைப்பதால், விதையளவை அதிகமாக உபயோகப்படுத்த நேரிடுவதோடு உற்பத்திச் செலவும் அதிகரிக்கும். முளைப்புத்திறனை அறிந்து விதைப்பதன் மூலம், முளைப்புத்திறனுக்கு ஏற்றவாறு விதையின் அளவை சரியாக கணக்கிட்டு பயன்படுத்த முடியும்.
இதன் மூலம், பற்றாக்குறை இன்றி, வளமான நாற்றுக்களைப் பெற்று நடவு செய்வதோடு, சரியான அளவில் பயிர் எண்ணிக்கையை பராமரித்து அதிக மகசூல் பெறலாம்.
விதையின் தரத்தை அறிய விரும்பும் விவசாயிகள் தங்களிடம் இருப்பில் உள்ள ஒவ்வொரு விதைக் குவியலில் இருந்தும், 100 கிராம் விதை மாதிரியை ரகம் வாரியாக எடுத்து, பல்லடம், திருச்சி ரோடு, திருநகர் காலனியில் உள்ள விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்புதுறையின் கீழ் இயங்கிவரும் அரசு விதை பரிசோதனை நிலையத்தில் கொடுத்து அறிந்துகொள்ளலாம்.