பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்; ராமதாஸ் அதிரடி
பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்; ராமதாஸ் அதிரடி
UPDATED : செப் 11, 2025 08:02 PM
ADDED : செப் 11, 2025 10:38 AM

விழுப்புரம்: பாமக செயல் தலைவர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
கடந்த ஆக., 17ம் தேதி புதுச்சேரியில் நடந்த பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை ஒழுங்கு நடவடிக்கை குழு சுமத்தியது.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு, ஆக., 31க்குள் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு, அன்புமணி விளக்கம் அளிக்கவில்லை. அதன்பிறகு, அவருக்கு இரண்டாவது தடவையாக, செப்., 10ம் தேதிக்குள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த காலக்கெடு நேற்றுடன் முடிந்துள்ள நிலையில், அன்புமணி தரப்பில் இருந்து நோட்டீசிற்கு விளக்கம் தரவில்லை.
இந்த நிலையில், பாமக செயல் தலைவர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கப்படுவதாக பாமக தலைவர் ராமதாஸ் அறிவித்துள்ளார். தனி அணியைப் போல அன்புமணி செயல்பட்டு வந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.