150 கிலோ வெடிபொருள் சிக்கியது காரில் கடத்தி வந்த 2 பேர் கைது
150 கிலோ வெடிபொருள் சிக்கியது காரில் கடத்தி வந்த 2 பேர் கைது
ADDED : ஜன 01, 2026 01:49 AM

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் அருகே உள்ள டாங்க் மாவட்டத்திற்கு, காரில் கடத்தி வரப்பட்ட 150 கிலோ எடை உடைய 'அம்மோனியம் நைட்ரேட்' வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
ராஜஸ்தானின் பண்டி மாவட்டத்தில் இருந்து டாங்க் மாவட்டத்திற்கு வெடிபொருட்கள் கடத்தப்படுவதாக, மாவட்ட சிறப்பு படைக்கு உளவுத் துறை தகவல் அளித்தது. இதைத் தொடர்ந்து டாங்க் நகரில் சிறப்பு படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
சந்தேகத்துக்கு இடமாக வந்த ஒரு காரை வழிமறித்து சோதனையிட்டனர். அப்போது காருக்குள் உர மூட்டைகளுக்கு இடையே, 150 கிலோ அம்மோனியம் நைட்ரேட் வெடி பொருட்களை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
மேலும், கடத்தலில் ஈடுபட்ட சுரேந்திர பத்வா, சுரேந்திர மோச்சி ஆகிய இருவரையும் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
இது தவிர, காரில் இருந்த 1,100 மீட்டர் நீளம் கொண்ட, 'ப்யூஸ் ஒயர்' உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக வெடி பொருட்கள் கடத்தி வரப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

