ADDED : ஜன 01, 2026 01:49 AM
சென்னை: தமிழக வனத்துறை சார்பில் வடிவமைக்கப்பட்ட, 'நாகம்' செயலி, அறிமுகமான ஐந்து மாதங்களிலேயே முடங்கியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக வனத்துறை சார்பில், வீடுகளில் பாம்பு புகுந்தால், அதை பிடிப்பதற்கு வசதியாக, 'நாகம்' என்ற மொபைல் செயலி, கடந்த ஜூலை 17ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. பாம்புகள் குடியிருப்பு பகுதியில் நுழைந்தால், இச்செயலியில் புகார் அளித்ததும், மீட்பு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அத்துடன் அந்த செயலியில், அரசு அங்கீகாரம் பெற்ற பாம்பு பிடி வீரர்களின் தொடர்பு எண்கள், பாம்பு கடித்தால் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ சிகிச்சை குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
அறிவியல் முறையை பின்பற்றாமல், பாம்புகளை பிடிப்பதை நிறுத்துவது, மனிதர் - பாம்புகள் இடையிலான மோதலை தடுப்பது, செயலியின் நோக்கம். இந்நிலையில், கடந்த ஜூலையில் அறிமுகமான நாகம் செயலி, பயன்பாட்டிற்கு வந்த, ஐந்து மாதங்களில் முடங்கியது. இது பொதுமக்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, பொதுமக்கள் சிலர் கூறியதாவது:
சென்னையில், அம்பத்துார், பாடி உள்ளிட்ட பகுதியில் பாம்புகளின் நடமாட்டம் அதிகம். இப்பகுதியில் நுழையும் பாம்புகளை, தனியார் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் பிடித்து வெளியேற்றுகிறோம். சமீபத்தில், தமிழக வனத்துறை சார்பில், 'நாகம்' செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில் ஏராளமான தொழில்நுட்ப கோளாறுகள் உள்ளன. செயலியில் நுழைய, ஒருமுறை பதிவிடும் ஓ.டி.பி., பெறுவது சிரமமாக உள்ளது. பலருக்கு அவர்களின் மொபைல் எண்ணிற்கு ஓ.டி.பி., வருவதில்லை.
செயலியை அறிமுகப்படுத்தும் முன், அதில் உள்ள பிரச்னைகளை ஆய்வு செய்து, அதிகாரிகள் சரி செய்திருக்க வேண்டும். அதை செய்யவில்லை. எனவே, வனத்துறை அதிகாரிகள், செயலி முறையாக செயல்பட, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

