/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிலம்பத்தால் எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் பிறக்கும் தன்னம்பிக்கை தருகிறார் பயிற்சியாளர் அன்பரசி
/
சிலம்பத்தால் எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் பிறக்கும் தன்னம்பிக்கை தருகிறார் பயிற்சியாளர் அன்பரசி
சிலம்பத்தால் எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் பிறக்கும் தன்னம்பிக்கை தருகிறார் பயிற்சியாளர் அன்பரசி
சிலம்பத்தால் எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் பிறக்கும் தன்னம்பிக்கை தருகிறார் பயிற்சியாளர் அன்பரசி
ADDED : செப் 11, 2025 03:15 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் பயிற்சியாளர் அன்பரசி, மாணவர்களுக்கு சிலம்பம் கற்று தந்து, பல்வேறு போட்டிகளில் பங்கேற்க வைத்து வெற்றி பெற செய்வதோடு, அவர்களை கின்னஸ் சாதனைகளையும் படைக்க வைத்து, அசத்தி வருகிறார்.
விழுப்புரம் அருகே காவணிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தனபூபதி. இவரது மனைவி நவநீதம்.
இருவருமே விவசாயம் செய்து வருகின்றனர். இந்த தம்பதியின் மகள் அன்பரசி. இவருக்கு சிறு வயதில் இருந்தே, சிலம்பம், கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகள் மீது அதிக ஆர்வம்.
இந்தநிலையில், தனபூபதி தனக்கு தெரிந்த சிலம்பம் கலையை அன்பரசிக்கு கற்று தந்துள்ளார். இதையடுத்து,
6ம் வகுப்பு பயிலும் போதே சிலம்பத்தை முறையாக அன்பரசி கற்று கொண்டார்.
அவர், சிலம்பத்தில் ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, சுருள்வால், அலங்கார சிலம்பம், தீப்பந்தம், வாள்வீச்சு, வளரி, குத்துவரிசை ஆகிய அனைத்திலும் சிறப்பாக தேறியதோடு பல மாவட்டங்கள், மாநிலம், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வென்று கோப்பைகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.
அன்பரசி, கடந்த 8 ஆண்டுகளாக சிலம்பம் பயிற்சியை மாணவ, மாணவிகளுக்கு பயிற்சியாளராக இருந்து கற்றுத்தந்து வருகிறார்.
அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு தான் கற்று கொண்ட சிலம்பம் கலையை இலவசமாக பயிற்சியளித்து வருகிறார்.
சிலம்பம் பயிற்சியாளர் அன்பரசி, கலை பண்பாட்டு துறை மூலம் கலை வளர்மணி என்ற அரசு விருதை பெற்றுள்ளார்.
மேலும், இவரின் சிலம்பம் சுற்றும் சாதனையை பார்த்து வீரமங்கை, கலை சுடர்மணி, சூப்பர் இளம்பெண், சிலம்பம் கலைவேந்தர் உட்பட பல விருதுகள், பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப் பட்டுள்ளன.
தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் தனக்கு மட்டுமின்றி, மற்றவர்களிடமும் போய் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் உத்வேகத்தோடு, வளரும் பருவமான மாணவ, மாணவிகளிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இவர், பல அரசு, தனியார் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு சிலம்பம் பயிற்சியளித்து வரு கிறார்.
பயிற்சியாளர் அன்பரசியிடம், சிலம்பம் கற்று கொண்ட மாணவர்கள் பல மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் வென்று சாதித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை ஒரு மணி நேரம் நிற்காமல் இடைவெளியின்றி சிலம்பம் சுற்றி உலக சாதனை படைக்க செய்துள்ளார். மேலும் இவரிடம் பயிற்சி பெற்ற 4 வயது பொன்மதியாள், தமிழ் இனியான் ஆகியோர் ஒரு மணி நேரம் கண்களை கட்டி கொண்டு இடைவெளியின்றி சிலம்பம் சுழற்றி சாதித்துள்ளனர்.
பயிற்சியாளர் அன்பரசியின் மாணவர் சரவணன், 2 மணி நேரம் நிற்காமல் சிலம்பத்தில் உள்ள ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, வேல் கம்பு, வாள்வீச்சு, தீப்பந்தம் ஆகியவற்றை செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
மேலும், பயிற்சியாளர் அன்பரசி, டி.என்.ஆர்.எஸ்., அன்பு சிலம்பம் மற்றும் கராத்தே அறக்கட்டளையை நிறுவி அதையும் மிக சிறப்பாக நடத்தி வருகிறார்.
தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் விழுப்பு ரம் மாவட்ட முதல் பெண் செயலாளராக அன்பரசி நியமிக்கப்பட்டு, பள்ளிக்கல்வி துறை மற்றும் முதல்வர் கோப்பை, சிலம்பம் போட்டிகளை முன்னெடுத்து நடத்தி வருகிறார்.
தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் தேசிய நடுவராகவும் அன்பரசி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து சிலம்பம் பயிற்சியாளர் அன்பரசி கூறியதாவது:
அரசு சிலம்பத்தில் வென்ற வீரர்களுக்கு வேலைவாய்ப்பில், 3 சதவீதம் இட ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது.
சிலம்பம் தற்காப்பு கலையாக மட்டுமில்லாமல் சிறந்த உடற்பயிற்சியாகவும் உள்ளது. இதை மாணவர்கள் கற்று கொள்ளும் போது, அவர்களின் உடல் தசைகள் சுறுசுறுப்பாக இயங்குகின்றன.
சிலம்பம் பயிற்சி பெற்றதால் தன்னம்பிக்கை , தைரியம், எதையும் எதிர்கொள்ளும் துணிவு வந்துள்ளது. மாணவர்கள் அனைவரும் சிலம்பம், கராத்தே போன்ற தற்காப்பு பயிற்சியை கற்று கொள்வது அவசியம்.
இவ்வாறு அவ ர் கூறினார்.