/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உழைப்பு... அர்ப்பணிப்பு தேடி வந்த பதவி!
/
உழைப்பு... அர்ப்பணிப்பு தேடி வந்த பதவி!
UPDATED : செப் 12, 2025 12:40 AM
ADDED : செப் 12, 2025 12:38 AM

பிரதமரிடம் கோரிக்கை சென்றடையும்!
தமிழரும், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக வெற்றி பெற்றதற்கு விவசாயிகள் சார்பில் பெருமை கொள்கிறோம். முன்னாள் எம்.பி., கயிறு வாரிய தலைவர், பா.ஜ., மாநிலத் தலைவர், தெலங்கானா, ஜார்க்கண்ட் மாநில கவர்னர் என, பல்வேறு பொறுப்புகளை வகித்து, இன்று வரை எந்த குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாதவர். இவ்வாறு, பன்முகத்தன்மை கொண்ட ஒருவர் துணை ஜனாதிபதியாக வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழ், தமிழர்கள் என்று பேசிக்கொண்டு, தமிழகத்தைச் சேர்ந்தவரை தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்த போதும், சி.பி., ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதால், நீதி வென்றுள்ளது.
தமிழக விவசாயிகளைப் பொறுத்தவரை, விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம், ஆனைமலையாறு- நல்லாறு திட்டம், கள் இறக்க அனுமதி, நதிநீர் இணைப்பு, ரேஷனில் தேங்காய் எண்ணெய் விநியோகம் உள்ளிட்ட திட்டங்கள் நீண்ட காலமாக முன் வைக்கப்பட்டு வருகின்றன. அனைவராலும் எளிதில் அணுகக்கூடியவராக உள்ள சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழக விவசாயிகளின் எண்ண ஓட்டங்களை அறிந்து, பிரதமர் மற்றும் மத்திய அரசிடம், விவசாயிகளின் கோரிக்கைகளை கொண்டு சேர்த்து, திட்டங்களை நிறைவேற்ற உறுதுணையாக இருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
- ஈஸ்வரன்
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில ஊடகப்பிரிவு செயலாளர்
திருப்பூர் மண்ணுக்குப் பெருமை
துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்க இருக்கிற சி.பி.ராதாகிருஷ்ணன், திருப்பூர் மண்ணில் பிறந்து, அரசுப்பள்ளியில் பயின்று, தன் இளங்கலை பட்டப்படிப்பை துாத்துக்குடியில் நிறைவு செய்தார். பின், பனியன் தொழில் நிறுவனம் நடத்தி, அதிலும் வெற்றி கண்டார். அக்கால கட்டத்தில் ஜனசங்கத்தில் உறுப்பினராக இருந்தார். கோவை எம்.பி.,யாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்கள் பணியை செவ்வனே செய்து வந்தார்.அதன் பின், தேசிய கயிறு வாரிய தலைவராக பொறுப்பேற்று, அதன் ஏற்றுமதியை இரட்டிப்பாக்கினார். ஜார்கண்ட், மகாராஷ்டிரா கவர்னராகவும், புதுச்சேரி, தெலுங்கானா மாநிலங்களில் பொறுப்பு கவர்னராகவும் பணியாற்றி, தேச வளர்ச்சி, மக்கள் முன்னேற்றத்துக்கு, சமூக அக்கறையுடன் பாடுபட்டார். அதன் பலனாக, நாட்டின் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, திருப்பூர் மண்ணுக்கு பெருமை சேர்ந்துள்ளார். தனது துவக்க காலம் முதல், அமைதி, எளிமை, ஆற்றலுடன் செயல்பட்டவர். திருப்பூர் நகர மற்றும் தொழில் வளர்ச்சிக்கு உதவுவார்.
- ராம முத்துராமன், தலைவர்
திருப்பூர் வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு
தமிழகத்தை உயர்த்தியவர்
திருப்பூர் மண்ணில் பிறந்து ஆர்.எஸ்.எஸ்., மற்றும் ஜனசங்கத்தில் தனது அரசியல் வேர் பதித்த, சி.பி.ராதாகிருஷ்ணன், பா.ஜ., மாநில தலைவராகவும் செயல்பட்டார். கோவை லோக்சபா தொகுதியில் இருமுறை எம்.பி.,யாக இருந்தவர். ஜார்கண்ட், தெலுங்கானா, புதுச்சேரி, மகாராஷ்டிரா மாநில கவர்னராக பணிபுரிந்த பெருமைக்குரியவர். அவரது வளர்ச்சியில் ஒரு அறியப்படாத சம்பவமாக, கடந்த, 2000ம் ஆண்டில், 93 நாட்களில், 19 ஆயிரம் கி.மீ., பயணித்த ரத யாத்திரை வாயிலாக, ஆறுகளை இணைக்கும் கோரிக்கையை முன்னிலைப்படுத்தினார். இது, அவரது பொது சேவையின் உறுதியை வெளிக்காட்டுவதாக அமைகிறது. தமிழகத்தின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திய பெருமை அவருக்கு சாரும்.
கயிறு வாரிய தலைவராக இருந்த அவர், அதன் ஏற்றுமதியை உயர்த்தினார். ஜார்கண்ட் ஆளுநராக அவர் பணியாற்றிய, 4 மாதங்களில், 24 மாவட்டங்களை சுற்றி, மக்களை நேரில் சந்தித்தார். துணை ஜனாதிபதி தேர்தலில் அவரது வெற்றி, தமிழகத்தின் அரசியல் பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது. அவரது தலைமையில், நாட்டின் அரசியல் சாசனம் மதிப்பு பெறும்.
- கொங்கு முருகேசன், மாநில தலைவர், கொங்கு ராஜாமணி, மாநில பொது செயலர், கொங்குநாடு விவசாயிகள் கட்சி
மக்கள் மனதை வென்றவர்
கோவை, திருப்பூர் மக்களின் வாழ்வியலை நெருங்கி புரிந்தவர், சி.பி.ராதாகிருஷ்ணன். வாலிபால், தொடர் ஓட்டம், டேபிள் டென்னிஸ் விளையாட்டுகளில் சிறந்து விளங்கியவர். விளையாட்டில் அவரது ஒழுக்கம், கட்டுப்பாடு, பின், அரசியலில் அவரது நேர்மையின் வெளிப்பாடாக மாறியது. உலகளாவிய தொழில் துறையின் கொள்கைகளில் அவரது பங்களிப்பும் உண்டு. கோவை எம்.பி.,யாக பணிபுரிந்த அவர், நுால் மற்றும் நெய்தல் குழு தலைவராக பணியாற்றினார். தொழிலாளர் நலன், ஏற்றுமதி ஊக்குவிப்பு, ஜி.எஸ்.டி., சலுகை உள்ளிட்ட பல தீர்மானங்களை முன்வைத்தார். 2003ல், ஐ.நா.,வில் இந்தியாவின் பிரதிநிதியாக உரையாற்றினார். திருப்பூர் வளர்ச்சிக்காக மின்கட்டண குறைப்பு, சலுகை திட்டம், ஏற்றுமதி ஊக்குவிப்பு ஆகியவற்றை முன்னெடுத்தார். ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி, விடுதி கட்டணம் வழங்கி, அவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்கினார்.கோவையில், மெட்ரோ திட்டம், புதிய தொழில் பார்க், குடிநீர், மின்சாரம், சாலை உள்ளிட்ட அடிப்படை தேவைகள் நிறைவேற அவர் முக்கிய காரணமாக இருந்துள்ளார். எளிய வாழ்க்கை, உயர்ந்த சிந்தனை, தனிப்பட்ட கார் கூட இல்லாமல் வாழும் இவர், சாந்தமான வாழ்க்கை முறையை பின்பற்றுகிறார். முனிவரை போன்ற பொறுமையும், பெருந்தன்மையும் அவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது. வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கு, அவர் 'ரோல் மாடல்'.
- ஜெய்பிரகாஷ், ஸ்டார்ட் அப் இந்தியா ஆலோசகர்
---
தேசப்பணி சிறக்கட்டும்
திருப்பூர் குமரனின் விடுதலை வேள்வியில் பூத்திட்ட திருப்பூர் மண்ணின் மைந்தர், சி.பி.ராதாகிருஷ்ணன். தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாக கொண்ட, ஆர்.எஸ்.எஸ்., தேசிய இயக்கத்தின் அடிப்படை தொண்டர் இவர். எண்ணம், சொல், செயல் என, மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வாழ்பவர். அன்னைத் தமிழ், ஆன்மிக தமிழின் மீது, பற்று கொண்டவர். இவரது பணிக்காலத்தில் பாரதம் புதியதோர் எழுச்சி பெற, கம்பராமனை வணங்கி, வாழ்த்துகிறேன்.
- ராமகிருஷ்ணன், திருப்பூர் கம்பன் கழக செயலாளர்
மக்களின் மகத்தான தொ ண்டர்
திருப்பூருக்கு இதுவரை கிடைத்த பெருமைகளுக்கு சிகரம் வைத்தது போன்று, மண்ணின் மைந்தரான சி.பி.ராதாகிருஷ்ணன், துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கடின உழைப்பு, தியாகம், தேசப்பற்று, தன்னம்பிக்கை, எளிய அணுகுமுறை, எளிமையான வாழ்க்கை ஆகியவை தான், அவரது உயர்வுக்கு காரணம். வெகுஜன மக்களின் தொண்டராகவும், தலைவராகவும் வாழ்ந்து வந்த அவருக்கு, நாட்டின் உயரிய பதவி தேடி வந்திருக்கிறது. இது, அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரு மகிழ்ச்சி தரும் விஷயம். உலக வரைபடத்தில் திருப்பூர், தன்னுடைய இருப்பை தக்க வைத்துக் கொண்டதற்கான மற்றொரு பதிவாக இது அமைந்திருக்கிறது.
-சோழா அப்புக்குட்டி, தமிழ்நாடு ஸ்பின்னிங் மில் அசோசியேஷன் தலைவர்.