/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்பாதைகள் வழியாக தப்பும் குற்றவாளிகள்
/
ரயில்பாதைகள் வழியாக தப்பும் குற்றவாளிகள்
ADDED : செப் 11, 2025 09:39 PM

கோவை; குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் ரயில் பாதைகள் வழியாக தப்பிச் செல்வதை தடுக்க, 180 கேமிராக்களை மாநகர போலீசார் பொருத்தியுள்ளனர்.
கோவை மாநகரில் குற்றச்சம்பவங்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை, திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் தப்பிக்க ரயில் பாதைகளை பயன்படுத்தி வருகின்றனர். ரயில் பாதைகள் வழியாக வரும் போது அவர்களை எளிதில் அடையாளம் காண முடிவதில்லை. இதன் காரணமாக பல வழக்குகளில் தீர்வு கிடைக்காமல் இருந்தது.
இதைக்கருத்தில் கொண்டு ரயில் பாதைகளை ஒட்டிய பகுதிகளில் கேமராக்களை பொருத்த மாநகர போலீசார் திட்டமிட்டனர்.
அதன்படி, கோவை மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில்,போத்தனுார் - இருகூர், இருகூர் - வடகோவை, போத்தனுார் - வடகோவை, வடகோவை - துடியலுார் ஆகிய நான்கு ரயில்பாதைகள் வருகின்றன. இவற்றில், மக்கள் நடமாட்டம் குறைவான பகுதிகள் உள்ளன.
இப்பாதைகளை கண்டறிந்து அவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, 180 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை மாநகர போலீஸ் அலுவலர் ஒருவர் கூறுகையில்,'ரயில்பாதைகள், அதை ஒட்டிய பகுதிகளில் நள்ளிரவில் மக்கள் நடமாட்டம் இருக்காது.
அதைப்பயன்படுத்தி குற்றவாளிகள் அந்த சமயங்களில் குடியிருப்புகளுக்குள் நுழைந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.
இதைத்தடுக்கவே ரயில்பாதைகளுக்கு அருகில் கேமராக்கள் பொருத்தப்பட்டன. தற்போது குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளன. கேமராவில் பதிவாகும் காட்சிகளை அந்தந்த பகுதி போலீசார் கண்காணிப்பர்,' என்றார்.