கனவு இல்லம் கட்டுவோர் பெரிதாக கனவு காண வேண்டாம்: ஊரக வளர்ச்சி துறை விழிப்புணர்வு பிரசாரம்
கனவு இல்லம் கட்டுவோர் பெரிதாக கனவு காண வேண்டாம்: ஊரக வளர்ச்சி துறை விழிப்புணர்வு பிரசாரம்
ADDED : செப் 11, 2025 01:50 AM

சென்னை:'கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவோர், பெரிதாக கனவு காணாமல், திட்ட மதிப்பீட்டிற்குள் வீடுகளை கட்டி முடிக்க வேண்டும்' என, ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த, அரசு உத்தரவிட்டு உள்ளது.
குடிசைகள் இல்லாத கிராமங்களை உருவாக்க, 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தை, அரசு செயல் படுத்தி வருகிறது.
நிதி நெருக்கடி
இத்திட்டத்தின் கீழ், நடப்பாண்டு ஒரு லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
பயனாளிகளுக்கு, தலா 3.50 லட்சம் ரூபாய் மானியம் வழங்க, 3,500 கோடி ரூபாயை அரசு ஒதுக்கி உள்ளது. இத்திட்டத்தின் கீழ், 60,000 வீடுகளில், மேற்கூரைக்கு கான்கிரீட் போடப்பட்டு, பணி நிறைவு பெற்றுள்ளது. எஞ்சிய வீடுகளில் பணிகள் இழுபறியாக உள்ளன.
இந்த திட்டத்தின் கீழ், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, பலரும் வீட்டை பெரிதாக கட்டும் முயற்சியில் இறங்கி உள்ளனர். ஆனால், பெரிய வீடுகள் கட்ட, அடித்தளம் அமைத்தவர்களில் பலரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர்.
வீடு கட்ட கடன் கேட்டு, வங்கிகளில் பலர் காத்திருக்கின்றனர். இதனால், குறித்த காலத்திற்குள் வீடுகளை கட்ட முடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே, கட்டுமானப் பணிகளை துவக்கியவர்கள், வீட்டு பணிகளை முடிக்க வசதியாக, வங்கி கடன் பெற்று தரும் பணிகளை மேற்கொள்ள, வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு, ஊரக வளர்ச்சி துறை வாயிலாக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தில் வீடு கட்டுவோருக்கு, உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு அறிவுறுத்தி உள்ளது.
கடனில் சிக்கும் நிலை
இது குறித்து, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறியதாவது:
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், மானிய உதவி பெற்ற பலரும், வீடுகளை பெரிதாக கட்ட ஆசைப்படுகின்றனர். இதனால், கடனில் சிக்கும் நிலைக்கு ஆளாகின்றனர்.
இது குறித்து, வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலர், ஊராட்சி ஒன்றிய பொறியாளர் வாயிலாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், வீடு கட்டும் பணியுடன், கழிப்பறை அமைக்கும் பணியையும் மேற்கொள்ள வேண்டும்.
வடகிழக்கு பருவமழை துவங்கும் முன், அனைத்து வீடுகளின் கான்கிரீட் பணிகளை முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நமது நிருபர்