UPDATED : செப் 12, 2025 12:00 AM
ADDED : செப் 12, 2025 10:26 AM
புதுடில்லி:
'டாடா சன்ஸ்' குழுமத்துக்குச் சொந்தமான, 'டாடா அட்வான்ஸ்டு சிஸ்டெம்ஸ் லிமிடெட்' நிறுவனம், பிரபல இன்ஜினியரிங் நிறுவனமான, 'இந்திரா' உடன் இணைந்து, நம் கடற்படைக்காக, மேம்பட்ட கடற்படை வான் கண்காணிப்பு ரேடாரை தயாரித்து வழங்கியுள்ளது.
இது குறித்து, டாடா அட்வான்ஸ் சிஸ்டெம்ஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை:
இந்திரா இன்ஜினியரிங் நிறுவனத்துடன் இணைந்து, '3டி ஏ.எஸ்.ஆர்., - லான்சா என்' என்ற மேம்பட்ட கடற்படை வான் கண்காணிப்பு ரேடாரை தயாரித்து இந்திய கடற்படைக்கு வழங்கி உள்ளோம்.
இது, பல்வேறு வகையான ட்ரோன்கள், சூப்பர்சோனிக் போர் விமானங்கள், கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் அனைத்து வகையான கடற்படை தாக்குதல்களை கண்டறிவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஸ்பெயின் நாட்டுக்கு வெளியே, 'லான்சா- என்' ரேடார் செயல்படுவது இதுவே முதன்முறை.
இந்திய போர்க்கப்பலில், இந்த கண்காணிப்பு ரேடாரின் சோதனை வெற்றிகரமாக நடந்தது. போர்க்கப்பலின் அனைத்து அமைப்புகளுடனும் ரேடார் தடையின்றி ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. இந்த சாதனை, இந்தியாவின் ராணுவ தற்சார்பு கொள்கைக்கு ஒரு முக்கிய மைல்கல். இந்த ரேடாரின் உற்பத்தியை ஆதரிக்க, கர்நாடகாவில் உள்ள எங்கள் நிறுவனத்திற்கு பிரத்யேக ஆலை உள்ளது. இது, வினியோகங்களை துரிதப்படுத்தும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.