கல்லுாரி மாணவிக்கு டி.சி., கொடுக்க தாயின் நகைகளை வாங்கிய கல்லுாரி சேர்மன்
கல்லுாரி மாணவிக்கு டி.சி., கொடுக்க தாயின் நகைகளை வாங்கிய கல்லுாரி சேர்மன்
UPDATED : செப் 12, 2025 12:00 AM
ADDED : செப் 12, 2025 10:25 AM
கொப்பால்:
நர்சிங் மாணவியின் இடமாற்ற சான்றிதழை வழங்க, அவரது தாயின் நகைகளை கழற்றி வாங்கிய கல்லுாரி சேர்மனது செயல், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலம், கொப்பால் மாவட்டம், முஸ்லாபுரா கிராமத்தை சேர்ந்த இளம்பெண் காவேரி, 19. இவர், கங்காவதியில் உள்ள பி.பி.சி., நர்சிங் கல்லுாரியில் சேர்ந்தார். மாணவியின் பெற்றோர், 10,000 ரூபாய் கட்டணம் செலுத்தினர். மீதம், 90,000 ரூபாயை பின்னர் செலுத்துவதாக கூறினர். மாணவி வகுப்புக்கும் ஆஜரானார்.
இதற்கிடையில் காவேரிக்கு, கதக்கின் அரசு நர்சிங் கல்லுாரியில், 'சீட்' கிடைத்தது. எனவே, டி.சி., அளிக்கும்படி பி.பி.சி., நர்சிங் கல்லுாரியில், அவரது பெற்றோர் வேண்டுகோள் விடுத்தனர். அக்கல்லுாரி சேர்மன் சினிவாலா, 'கட்டண பாக்கி 90,000 ரூபாயை செலுத்தினால் மட்டுமே, டி.சி., அளிக்கப்படும்' என, பிடிவாதம் பிடித்தார்.
'எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை' என, காவேரியின் பெற்றோர் கூறினர். அதை சேர்மன் பொருட்படுத்தாமல், 'பணம் இல்லையென்றால், நீங்கள் அணிந்துள்ள தங்க நகைகளை கழற்றி தாருங்கள்' என, கேட்டுள்ளார்.
காவேரியின் தாயும் வேறு வழியின்றி தன் தாலிச்செயின், கம்மலை கழற்றி கொடுத்தார்.
இது குறித்து, காவேரியின் தாய் ரேணுகாம்மா கூறியதாவது:
என் மகளுக்கு அரசு கல்லுாரியில் சீட் கிடைத்ததால், டி.சி., கேட்டோம். ஆனால், முழு கட்டணத்தையும் கொடுத்தால்தான், டி.சி., கொடுப்பதாக சேர்மன் கூறினார். எங்களிடம் பணம் இல்லை என்பதால், தங்க நகைகளை கேட்டார். நாங்களும் நகைகளை கொடுத்த பின், மதிப்பெண் சான்றிதழ், டி.சி., கொடுத்தனர்.
டி.சி., கிடைக்காத விரக்தியில், என் மகள் தவறான முடிவை எடுத்தால் யார் பொறுப்பு. பலரும் கண்டித்த பின், சேர்மன் மன்னிப்பு கேட்டு, நகைகளை திருப்பி கொடுத்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.