இந்திய பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதம் ஆக அதிகரிக்கும்!
இந்திய பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதம் ஆக அதிகரிக்கும்!
UPDATED : செப் 12, 2025 12:00 AM
ADDED : செப் 12, 2025 10:27 AM

புதுடில்லி:
'வலுவான ஜூன் காலாண்டு வளர்ச்சி மற்றும் உள்நாட்டு தேவை அதிகரிப்பு காரணமாக நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி., வளர்ச்சி 6.9 சதவீதமாக அதிகரிக்கும்' என அமெரிக்க கடன் மதிப்பீட்டு நிறுவனமான பிட்ச் ரேட்டிங்ஸ் கணித்து உள்ளது. முன்னர், 6.5 சதவீதம் என அது கணித்திருந்தது.
அதன் உலகளாவிய பொருளாதார பார்வையில் தெரிவித்து உள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், பொருளாதார வளர்ச்சி 7.80 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஜூன் காலாண்டு வெளிப்பாடு காரணமாக வரும் 2026 மார்ச்சில் முடியும் நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி, 6.50 சதவீதத்தில் இருந்து 6.90 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கிறோம்.
சமீபத்திய மாதங்களில், இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா, ஆக.,27 முதல், 50 சதவீத வரி விதித்தது.
வரி விகிதம் குறைவதற்கான வாய்ப்பு குறைவு, நிலையற்றத்தன்மை காரணமாக இந்தியாவின் வர்த்தகம், முதலீடு பாதிக்கும் என எதிர்ப்பார்த்தோம். ஆனால் இந்தியா ஜி.எஸ்.டி., சீர்திருத்தத்தை செப்.22 முதல் அமல்படுத்த உள்ளது.
இது குறிப்பிடும் வகையில், நுகர்வோர் செலவிடுவதை ஊக்குவித்து, நடப்பு நிதியாண்டிலும், அடுத்த நிதியாண்டிலும் வளர்ச்சியை அதிகரிக்கும். உள்நாட்டு தேவை, வளர்ச்சிக்கான முக்கிய காரணியாக இருக்கும்.
வலுவான வருமானம் நுகர்வோர் செலவிடுவதை ஆதரவளிக்கும். நிதி நிலைமை, முதலீடு செய்வதை ஊக்குவிக்கும். இருப்பினும், அக்டோபர் முதல் மார்ச் வரையிலான இரண்டாவது அரையாண்டு காலத்தில், பொருளாதார வளர்ச்சி மந்தமாகவே இருக்கும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.
2026-27ல் ஜி.டி.பி., வளர்ச்சி 6.3 சதவீதமாகவும், 2027-28ம் நிதியாண்டில் 6.2 சதவீதமாகவும் இருக்கும் என கணிப்பு