வரைபடத்தில் ஹிமாச்சல் காணாமல் போய்விடும்: சுற்றுச்சூழல் குறித்து சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
வரைபடத்தில் ஹிமாச்சல் காணாமல் போய்விடும்: சுற்றுச்சூழல் குறித்து சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
ADDED : ஆக 03, 2025 01:20 AM

புதுடில்லி: 'ஹிமாச்சல பிரதேசத்திற்கு ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் ஆபத்தை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், நம் தேசத்தின் வரைபடத்தில் இருந்தே அம்மாநிலம் காணாமல் போய்விடும்' என, உச்ச நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.
ஹிமாச்சல பிரதேசத்தில், முதல்வர் சுக்விந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
சுற்றுலா பயணியரின் சொர்க்க பூமியான இம்மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள சுக்விந்தர் சிங் அரசு திட்டமிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல மனுவை ஹிமாச்சல பிரதேச உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனு நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்தி வைத்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கட் டுமானங்களுக்கு அனுமதி கொடுத்து கொண்டே இருந்தால் நிலைமை மோசமாகிவிடும்.
அரசின் இம்முடிவால் ஹிமாச்சல பிரதேசம் காற்றோடு காற்றாக கரைந்து, நம் தேசத்தின் வரைபடத்தில் இருந்தே காணாமல் போய்விடும். அந்நாள் வெகு தொலைவில் இல்லை. கடவுள் அருளால் இந்நிகழ்வு நடக்கவே கூடாது.
தேவையற்ற நீர்மின் திட்டங்கள், சாலைகள் விரிவாக்கம், காடுகள் அழிப்பு, முறைப்படுத்தப்படாத அடுக்குமாடி கட்டடங்கள் ஆகியவை சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்து வருகின்றன. இது தவிர பெரிய அளவிலான அணை கட்டுமானங்களும் சுற்றுச்சூழலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன.
உள்ளூர் பொருளாதாரத்தில் சுற்றுலா மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், முறைப்படுத்தப்படாத சுற்றுலா இயற்கைக்கு எதிராக திரும்பி, பேரிடர்கள் ஏற்படுவதற்கு வழிவகுத்து இருக்கிறது.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.