மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: உ.பி., முதல்வர் பெயரை சொல்ல சொல்லி சித்ரவதை
மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: உ.பி., முதல்வர் பெயரை சொல்ல சொல்லி சித்ரவதை
ADDED : ஆக 03, 2025 01:26 AM

மும்பை: மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பெயரை குறிப்பிடும்படி, மஹாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு படையினர் அடித்து சித்ரவதை செய்ததாக, அரசு தரப்பு சாட்சி ஒருவர் சிறப்பு நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த தகவல் தெரிய வந்துள்ளது.
மஹாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் என்ற இடத்தில், 2008 செப்டம்பரில் குண்டு வெடித்ததில் ஆறு பேர் கொல்லப்பட்டனர்; 101 பேர் காயமடைந்தனர். சம்பவம் நடந்த போது, மாநிலத்தில் காங்., கூட்டணி ஆட்சியில் இருந்தது.
'இந்த குண்டு வெடிப்புக்கு காவி பயங்கரவாதம் தான் காரணம்' என, அப்போது காங்., அரசு குற்றஞ்சாட்டியது.
இந்த வழக்கில், பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினனட் கர்னல் பிரசாத் புரோஹித் உட்பட ஏழு பேர் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
முதலில், மஹாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப்படை விசாரித்த நிலையில், பின், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்புக்கு வழக்கு மாற்றப்பட்டது. 17 ஆண்டுகளாக விசாரணை நடந்த நிலையில், மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் 31ல் தீர்ப்பு அளித்தது.
துன்புறுத்தல் உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்க அரசு தரப்பு தவறி விட்டதால், பிரக்யா சிங் தாக்கூர் உட்பட ஏழு பேரை விடுதலை செய்து, சிறப்பு நீதிபதி ஏ.கே.லஹோதி தீர்ப்பளித்தார். 1,000 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பின் முழு விபரம் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
விசாரணையின் போது, சிறப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பு சாட்சியான மிலிந்த் ஜோஷிராவ் என்பவர் அளித்த வாக்குமூலம்:
என்னை குற்றவாளி போல பயங்கரவாத தடுப்பு படையினர் நடத்தினர். அவர்களது அலுவலகத்தில் ஏழு நாட்கள் என்னை அடைத்து வைத்தனர்.
இந்த வழக்கில், யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் அசிமானந்த், இந்திரேஷ் குமார், பேராசிரியர் தேவ்தர், சாத்வி, காகாஜி ஆகியோரின் பெயரை குறிப்பிடும்படி, என்னை அடித்து சித்ரவதை செய்தனர். அவர்களது பெயரை சொன்னால் வழக்கில் இருந்து விடுவிப்பதாகவும் கூறினர்.
ஆனால் நான் மறுத்தேன். இதனால் ஆத்திரமடைந்த அப்போதைய போலீஸ் அதிகாரிகள் ஸ்ரீராவ், பரம் பீர் சிங் ஆகியோர், என்னை அடித்து துன்புறுத்தினர்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிராகரிப்பு நீதிமன்றத்தில், மஹாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு படையினர் தாக்கல் செய்த அறிக்கையில், மிலிந்த் ஜோஷிராவின் வாக்குமூலம் வேறு மாதிரியாக இருந்தது.
ஆனால், அவர் நேரில் ஆஜர்படுத்தப்பட்ட போது, நடந்ததை நீதிபதியிடம் கூறினார்.
இதன் மூலம், பயங்கரவாத தடுப்புப் படையின் முகமூடி கிழிக்கப்பட்டது. இதை பதிவு செய்த சிறப்பு நீதிபதி ஏ.கே.லஹோதி, தன்னிச்சையாக வற்புறுத்தி அளிக்கப்பட்ட வாக்குமூலத்தை ஏற்க முடியாது எனக்கூறி நிராகரித்தார்.
முன்னதாக, இந்த வழக்கில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்தை கைது செய்யும்படி அழுத்தம் கொடுத்ததாக, விசாரணை பிரிவில் இருந்த பயங்கரவாத தடுப்புப்படை முன்னாள் அதிகாரி மெஹ்பூப் முஜாவார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.