பாகிஸ்தான் - வங்கதேசம் உயர்மட்ட அதிகாரிகள் ரகசிய பேச்சு ! : விமானப்படையில் இணைந்து செயல்பட முடிவு
பாகிஸ்தான் - வங்கதேசம் உயர்மட்ட அதிகாரிகள் ரகசிய பேச்சு ! : விமானப்படையில் இணைந்து செயல்பட முடிவு
ADDED : ஆக 03, 2025 01:18 AM

புதுடில்லி: பாகிஸ்தான் விமானப்படை தளபதி - வங்கதேச ராணுவ உயர்மட்ட அதிகாரிகளுக்கு இடையே நடந்த ரகசிய ராணுவ சந்திப்பை நம் உளவுத் துறை கண்டுபிடித்து உள்ளது. அதில், 'ட்ரோன்' பரிமாற்றம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாடுகளும் விவாதித்துள்ளன. இதைத் தொடர்ந்து, நம் படைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. நம் அண்டை நாடுகளான பாக்., சீனா, வங்கதேசம் ஆகியவை நட்பு நாடுகளாக இல்லாமல் எதிரி நாடுகளாகவே இருக்கின்றன. பாகிஸ்தானை பற்றி சொல்லவே தேவையில்லை.
துவக்கத்தில் இருந்தே பயங்கரவாதிகளை ஆதரித்து, நமக்கு தொல்லை அளித்து வருகிறது. சீனாவோ எல்லையில் வேறு மாதிரியான வகையில் தொல்லை தருகிறது.
எல்லையில் ராணுவ வீரர்களை குவிப்பது,கட்டுமானம் கட்டுவது என பல நெருக்கடிகளை அந்நாடு தருகிறது.
வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா பிரதமராக இருந்த வரையில், அந்நாட்டுடனான உறவு சுமுகமாக இருந்தது. அவர் ராஜினாமா செய்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பதவியேற்றதும், நிலைமை அப்படியே தலைகீழானது.
ஆலோசனை சீன ஆதரவாளரான அவர், நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளார். நட்பு நாடுகளாக இருக்க வேண் டிய அண்டை நாடுகள், நம் நாட்டின் மீது எவ்வளவு 'பாசமாக' இருக்கின்றன என்பதை பாருங்கள்.
இந்நிலையில், பாக்., - வங்கதேசம் உயர்மட்ட அதிகாரிகளுக்கு இடையே, கடந்த ஏப்ரலில் நடந்த ரகசிய ராணுவ சந்திப்பை, நம் உளவுத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து, உளவுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:
வங்கதேச தலைநகர் டாக்காவில், பாக்., விமானப்படை தளபதி ஜாகீர் அகமது பாபர் - வங்கதேச ஆயுதப்படையின் உயர்மட்ட அதிகாரிகள் இடையே, கடந்த ஏப்., 15 - 19ம் தேதி வரை ரகசிய சந்திப்பு நடந்தது.
இதில், இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகள் பற்றியும், விமானப்படையில் இணைந்து செயல்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.
'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் தயாரிப்பு, தகவல் தொடர்பு, விண்வெளி நடவடிக்கைகள், சைபர் போர் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
எதையும் குறிப்பிடும்படி உரையாடல் நடக்கவில்லை என்றாலும், ட்ரோன் தயாரிப்பில் பாக்., - வங்கதேசம் ஆகியவை இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன.
சீனாவின் உதவியுடன் ட்ரோன் தயாரிப்பை மேம்படுத்தி வரும் பாக்., தற்போது அந்த தொழில்நுட்பத்தை வங்கதேசத்துடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளது.
ஒருங்கிணைப்பு திறன் வான்வழி நடவடிக்கைக்கு பயன்படும் நிகழ் நேர தகவல் தொடர்பு சேனலை வங்கதேசம் பயன்படுத்த உள்ளது.
இது, அந்நாட்டின் விமானப்படையின் இயங்குதன்மையை கணிசமாக அதிகரிக்கும். மேலும், ஒருங்கிணைப்பு திறன்களை மேம்படுத்தும்.
முக்கிய தகவல் என்னவென்றால், பாக்., - வங்கதேசம் இடையே நடந்த இந்த ரகசிய ராணுவ சந்திப்பில், மூன்றாவது நபராக சீனா பங்கேற்று ஆலோசனை வழங்கியதும் தெரிய வந்துள்ளது.
நிகழ்நேர போர் சூழல்களை உருவகப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட 'ஆக்மென்டட் ரியாலிட்டி, மெய்நிகர் ரியாலிட்டி' அமைப்புகளை பாக்., - வங்கதேச விமானப்படைகள் ஆராய்ந்து வருகின்றன. இந்த அமைப்புகள் தற்போது உலகில் பெரிய நாடுகளிடமே உள்ளன.
இந்த ரகசிய சந்திப்பில், வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீனை நீக்குவது பற்றியும் பேசப்பட்டுள்ளது. அவருக்கு பதில் ராணுவ பின்புலம் கொண்ட நபரை நியமிக்க பாக்., விரும்புகிறது. இதற்கான வேலைகளும் திரை மறைவில் நடக்கின்றன.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
பாக்., - வங்கதேச ராணுவ உறவு ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்துஉள்ளது.
ட்ரோன் தொழில்நுட்பம், டிஜிட்டல் போர், அரசியல் உள்ளிட்டவை முக்கிய கொள்கையாக இருப்பதால், நம் நாடு விழிப்புடன் இருப்பது மட்டுமின்றி, துாதரக மற்றும் பாதுகாப்பு நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.