முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட் கண்டனம்!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட் கண்டனம்!
ADDED : ஜூலை 30, 2025 06:34 AM

புதுடில்லி: 'முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளில் விசாரணையை இழுத்தடிக்க தமிழக அரசு முயற்சிக்கிறதா?' என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த 2011 - 15 வரையிலான அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது லஞ்சம் பெற்றுக் கொண்டு பணி ஆணைகளை வழங்கியதாக செந்தில் பாலாஜி மீது புகார்கள் எழுந்தன. கைது இது தொடர்பாக தமிழக போலீஸ், 2018ல் மூன்று வழக்குகளை பதிவு செய்திருந்தது. அதன்பின், இந்த விவகாரத்தை விசாரித்த அமலாக்கத் துறை, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் 2021 ஜூலையில் அவர் மீது வழக்கு பதிந்தது.
இந்த சூழலில் தி.மு.க.,வில் இணைந்த செந்தில் பாலாஜி கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை அடுத்து, மின்சாரம் மற்றும் கலால் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
அதே நேரம், வழக்கை தீவிரமாக விசாரித்து வந்த அமலாக்கத் துறை, சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜியை கடந்த 2023 ஜூன் 14ல் கைது செய்தது.
இதனால், அவரது அமைச்சர் பதவி பறிபோனது. தொடர்ந்து 15 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த நிலையில், உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பரில் அவருக்கு ஜாமின் வழங்கியது. சிறையில் இருந்து வெளியே வந்த ஓரிரு நாட்களிலேயே, அவர் மீண்டும் அதே இலாகாக்களின் அமைச்சராக பதவியேற்றார்.
இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்ந்தால், அவர் மீதான வழக்கு விசாரணை எப்படி நியாயமாக நடக்கும்' என, கேள்வி எழுப்பியது. 'ஒன்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையெனில் ஜாமினை ரத்து செய்து சிறைக்கு செல்ல உத்தரவிடுவோம்' என, எச்சரித்தது.
இதனால், கடந்த ஏப்ரல் 27ல் அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார்.இந்நிலையில், செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணை தொடர்பாக ஒய்.பாலாஜி என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை ஏற்கனவே தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், ஜாய்மால்யா பக்சி அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகள் முறையாக விசாரிக்கப்படவில்லை. வழக்கை இழுத்தடிக்க, 2,300 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்' என வாதிட்டார். இயலாத காரியம் இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் லஞ்சம் கொடுத்தவர்கள், லஞ்சம் வாங்கியவர்கள், அமைச்சரின் உதவியாளர்கள், அரசு அதிகாரிகள் என 2,300 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தி வழக்கை முடிப்பது என்பது இயலாத காரியம். இதில், பாதிக்கப்பட்ட நபர்களையும் குற்றவாளிகளாக சித்தரிக்க முயல்வது நன்றாகவே தெரிகிறது. வழக்கை இழுத்தடிக்க தமிழக அரசு முயல்கிறதா?
எனவே, இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தவிர, இடைத்தரகர்களாக செயல்பட்டவர்கள், அமைச்சரின் பரிந்துரையின் பேரில் பணியாற்றிய அதிகாரிகள், பணம் பெற்று பணி ஆணை வழங்கியோர் என அனைவரது விபரங்களையும் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். இது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இவ்வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, உச்ச நீதிமன்றம் கேட்ட விபரங்களை தாக்கல் செய்வதாக உறுதியளித்தார். இதையடுத்து இவ்வழக்கு இன்றும் விசாரணைக்கு வருகிறது.
- டில்லி சிறப்பு நிருபர் -