ADDED : ஜூலை 31, 2025 11:58 PM

திருவனந்தபுரம்: கேரளாவில், பள்ளிக்கான ஆண்டு விடுமுறையை கோடைக்காலமான ஏப்ரல் - மே மாதத்திலிருந்து, மழைக்காலமான ஜூன் - ஜூலைக்கு மாற்ற அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இம்மாநில கல்வி அமைச்சர் சிவன் குட்டி நேற்று வெளியிட்ட அறிக்கை:
கேரளாவில் பள்ளிகளுக்கான ஆண்டு விடுமுறை தற்போது ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் விடப்படுகிறது. இந்த மாதங்களில் மாநிலத்தில் நிலவும் வெப்பம் குழந்தைகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது என்பது உண்மைதான்.
அதே சமயம், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பெய்யும் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்க வேண்டியுள்ளது. இதனால் மாணவர்களின் படிப்பு தடைபடுகிறது.
எனவே, பள்ளி விடுமுறையை ஏப்ரல் - மே மாதங்களில் இருந்து, கனமழை பெய்யும் ஜூன் - ஜூலை மாதங்களுக்கு மாற்றுவது குறித்து பொது விவாதம் துவங்கப்பட்டுள்ளது.
மே -- ஜூன் மாதமும் யோசனையில் உள்ளது. இந்த விஷயத்தில் பொது மக்கள் கருத்துகளையும், பரிந்துரைகளையும் தெரிவிக்கலாம். ஆக்கபூர்வமான விவாதத்தைத் துவங்க இது உதவும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.