சிதம்பரம் கோவிலில் உயர் நீதிமன்றமே ஆய்வு செய்ய வேண்டும்: காடேஸ்வரா
சிதம்பரம் கோவிலில் உயர் நீதிமன்றமே ஆய்வு செய்ய வேண்டும்: காடேஸ்வரா
ADDED : ஆக 03, 2025 02:54 AM

திருப்பூர்: ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
'சிதம்பரம் நடராஜர் கோவிலில், அதிக அளவில் மக்கள் தரிசனம் செய்கின்றனரா; தீட்சிதர்களால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறதா?' என, குழு அமைத்து அறநிலையத் துறை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, அதிர்ச்சி அளிப்பதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.
ஏற்கனவே, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் நிலைமை, நிர்வாக சீர்கேடு, பராமரிப்பின்மை, பக்தர்களுக்கு சிரமம் என தினமும் பல தகவல்கள் வருகின்றன.
குறிப்பாக, திருச்செந்துார், திருவண்ணாமலை உட்பட பல கோவில்களில் அடிப்படை வசதிகளின்றி, பல மணி நேரம் வரிசையில் நின்று பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
கோவில்களில் அடிப்படை வசதிகள் கூட செய்யாத அறநிலையத் துறையையே, சிதம்பரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்வதை ஆய்வு செய்யுமாறு கூறி இருப்பது, எந்த விதத்திலும் பொருந்தாத செயல்.
ஏற்கனவே அறநிலையத் துறைக்கு பல உத்தரவுகளை உயர் நீதிமன்றம் பிறப்பித்தும், அதில் எதையும் இன்று வரை அறநிலையத் துறை நிறைவேற்றவில்லை.
இதனால், சில இடங்களில், அந்த துறை அதிகாரிகளே நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை சந்திக்கின்றனர். இந்த சூழலில், சிதம்பரம் கோவிலை அறநிலையத் துறை ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் கூறியிருப்பது பொருத்தமற்றது.
பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டே இந்த உத்தரவை பிறப்பித்திருந்தால், பக்தியுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவை அமைத்து, நீதிமன்றமே நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.