அக்.1 முதல் இந்தியா- பிலிப்பைன்ஸ் நேரடி விமான சேவை; அறிவித்தார் பிரதமர் மோடி!
அக்.1 முதல் இந்தியா- பிலிப்பைன்ஸ் நேரடி விமான சேவை; அறிவித்தார் பிரதமர் மோடி!
ADDED : ஆக 05, 2025 07:57 PM

புதுடில்லி: இந்தியாவிலிருந்து பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிற்கு நேரடி விமான சேவை அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.
தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகளுடன் நல்ல உறவை இந்தியா கொண்டுள்ளது. அந்த வகையில், பிலிப்பைன்ஸ் உடனான துாதரக உறவு, 75 ஆண்டை நிறைவு செய்கிறது. இந்தியா வந்துள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது இருநாட்டு தலைவர்களும் பல்வேறு துறைகளில் உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.
இரு நாடுகளுக்கு இடையே கலாச்சாரம், பாதுகாப்பு, விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 9 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகின. பின்னர், பிலிப்பைன்ஸ் அதிபர் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு விசா இல்லாத நுழைவுச் சலுகைகளை அறிவித்தார்.
இதற்கு பதிலாக, இந்தியாவிலிருந்து பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிற்கு நேரடி விமான சேவை அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். இந்திய தலைநகரங்களுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே நேரடி விமான சேவையை ஏர் இந்தியா விமான நிறுவனம் முதலில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகள் வாருங்கள்
'பிலிப்பைன்ஸ்க்கு அதிகப்படியான இந்திய சுற்றுலாப் பயணிகள் வருகை தர வேண்டும். இந்த ஆண்டு அக்டோபர் முதல் நேரடி விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்படுவதை நாங்கள் வரவேற்கிறோம் என பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் தெரிவித்தார்.
விமான சேவை
இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது: இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு விசா இல்லாத நுழைவை அனுமதிக்கும் பிலிப்பைன்ஸின் முடிவை இந்தியா வரவேற்கிறது. அதற்கு ஈடாக, பிலிப்பைன்ஸ் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தியா இலவச மின்-விசாக்களை வழங்கும். இந்தியாவிற்கும் மணிலாவிற்கும் இடையே நேரடி விமானங்கள் இந்த ஆண்டு தொடங்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.