அதிக நாட்கள் பதவி வகித்த உள்துறை அமைச்சர்: அத்வானியின் சாதனையை முறியடித்த அமித்ஷா
அதிக நாட்கள் பதவி வகித்த உள்துறை அமைச்சர்: அத்வானியின் சாதனையை முறியடித்த அமித்ஷா
UPDATED : ஆக 05, 2025 08:28 PM
ADDED : ஆக 05, 2025 08:04 PM

புதுடில்லி: இந்தியாவில் அதிக நாட்கள் உள்துறை அமைச்சர் பதவியில் இருந்தவர் என்று பாஜ மூத்த தலைவர் அத்வானி படைத்த சாதனையை அமித்ஷா முறியடித்துள்ளார். இதற்காக அவருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பை கையாளும் திறன் கொண்டது மத்திய உள்துறை அமைச்சர் பதவி. நாடு சுதந்திரம் படைத்ததும் சர்தார் வல்லபாய் படேல், நாட்டின் முதல் உள்துறை அமைச்சராக பதவியேற்று கொண்டார். அவர் 3 ஆண்டுகள் 119 நாட்கள் இந்தப் பதவியில் இருந்தார்.
அவருக்கு பிறகு, ராஜாஜி, கைலாஷ் நாத் கட்ஜூ, ஜிபி பன்ட், லால் பகதூர் சாஸ்திரி, குல்சாரிலால் நந்தா, சவான், பிரமானந்தா ரெட்டி, சரண் சிங், மொரார்ஜி தேசாய், ஜெயில் சிங், பூடா சிங், முப்தி முகமது சயீத், சந்திரசேகர், முரளி மனோகர் ஜோஷி, அத்வானி, சிவராஜ் பாட்டீல், சிதம்பரம், சுஷில்குமார் ஷிண்டே, ராஜ்நாத் சிங் ஆகியோர் உள்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளனர். மேலும் முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா, குல்சாரிலால் நந்தா ஆகியோரும் உள்துறை அமைச்சர் பதவியை தங்கள் வசம் வைத்து இருந்தனர்.
இதில், அதிக நாட்கள் உள்துறை அமைச்சர் பதவி வகித்தவர் என்ற பெருமை தற்போதைய அமைச்சர் அமித்ஷாவுக்கு கிடைத்துள்ளது. அவர், கடந்த 2019ம் ஆண்டு மே 31ம் தேதி மத்திய உள்துறை அமைச்சராக பதவி ஏற்றார். கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலிலும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 2024ம் ஆண்டு ஜூன் 10ம் தேதி மீண்டும் மத்திய உள்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இதன் மூலம் 2,258 நாட்கள் பதவி வகித்து இந்த சாதனையை படைத்தார்.
இதற்கு முன்னர் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி 2,256 நாட்கள் ( 19 மார்ச் 98 - 13 அக்.,99 வரையிலும், 13 அக்.,99 முதல் 22 மே 2004 வரையிலும்) இந்தப் பதவியில் இருந்துள்ளார்.
இதற்கு முன்னர், நேரு ஆட்சி காலத்தில் கோவிந்த் வல்லபாய் படேல் 2,246 நாட்கள் ( 10 ஜன.,55 முதல் 17 ஏப்.,1957 வரையிலும்; 17 ஏப்.,1957- 7 மார்ச்1961) வரையிலும் இந்த பதவியில் அவர் இருந்தார்.
நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேல், 15 ஆக.,1947 முதல் 12 டிச.,1950 வரையிலும் 1,218 நாட்கள் பதவியில் இருந்துள்ளார்.
காஷ்மீர் சிறப்பு சட்டம் நீக்கப்பட்ட நாளான ஆக.,5ம் தேதியன்று, அதிக நாட்கள் உள்துறை அமைச்சர் பதவியில் வகித்தவர் என்ற பெருமையை அமித்ஷா பெற்றுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.