ஐ.ஐ.டி., ஹைதராபாத் மாணவருக்கு ரூ.2.50 கோடி சம்பளத்தில் வேலை
ஐ.ஐ.டி., ஹைதராபாத் மாணவருக்கு ரூ.2.50 கோடி சம்பளத்தில் வேலை
ADDED : ஜன 03, 2026 03:09 AM

ஹைதராபாத்: தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத் ஐ.ஐ.டி., உயர் கல்வி நிறுவனத்தில் இறுதி ஆண்டு கணினி அறிவியல் படிக்கும் எட்வர்ட் நாதன் வர்கீஸ், 21, என்ற மாணவருக்கு, ஆண்டுக்கு 2.50 கோடி ரூபாய் சம்பளத்துடன் நெதர்லாந்து நாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது.
ஆர்வம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த உயர் கல்வியில் சேர மாணவர்களின் முதல் தேர்வாக இந்திய தொழில்நுட்ப நிறுவனம் எனப்படும் ஐ.ஐ.டி., உள்ளது. இதன் கிளை தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதிலும் உள்ளது.
ஹைதராபாதைச் சேர்ந்த மாணவர் எட்வர்ட் நாதன் வர்கீஸ், ஐ.ஐ.டி., நுழைவுத்தேர்வான ஜே.இ.இ.,யில் 558வது இடம் பிடித்து 2022-ல் இங்கு சேர்ந்தார்.
கணினிக்கான மென்பொருள் நிரல்களை எழுதுவதில் ஆர்வம் இருந்ததால், இளநிலை கணினி அறிவியல் பிரிவை தேர்வு செய்தார்.
பணித்திறன் தற்போது இறுதி ஆண்டு படித்து வரும் இவரை, ஐரோப்பிய நாடான நெதர்லாந்தைச் சேர்ந்த, 'ஆப்டிவேர்' எனப்படும் பங்குச்சந்தை சார்ந்த தொழில்நுட்ப நிறுவனம், ஆண்டுக்கு 2.50 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு எடுத்து உள்ளது.
இவர் சில மாதங்களுக்கு முன், 'இன்டெர்ன்ஷிப்' எனப்படும் களப்பயிற்சிக்கு இந்நிறுவனத்தில் தேர்வாகி இருந்தார்.
'கிளவுட்' கட்டமைப்பு மற்றும் 'ஆட்டோமேஷன்' என்ற தொழில்நுட்பத்தில் எட்வர்டுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
அதில், கடும் அழுத்தங்களுக்கு இடையிலும் முடிவெடுப்பது மற்றும் பணித்திறனில் சிறப்பாக செயல்பட்டதால், அவரை 2.50 கோடி ரூபாய் சம்பளத்தில் பணிக்கு எடுக்க நிறுவனம் முடிவு செய்தது.
ஐ.ஐ.டி., ஹைதராபாத் வரலாற்றில், இவ்வளவு அதிக சம்பளத்தில் வேலைக்கு சேர உள்ள முதல் மாணவர் வர்கீஸ் தான். இதற்கு முன், ஆண்டுக்கு 1.10 கோடி ரூபாய் சம்பளத்தில் மாணவர் ஒருவர் பணி ஆணை பெற்றிருந்தார்.

