நாகரிகமற்ற தலைவர் டிரம்ப்: முன்னாள் பிரதமர் விமர்சனம்
நாகரிகமற்ற தலைவர் டிரம்ப்: முன்னாள் பிரதமர் விமர்சனம்
ADDED : ஆக 03, 2025 01:10 AM

புதுடில்லி: ''அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை போல உறுதியற்ற, நாகரிகமற்ற மற்றும் பொறுப்பற்ற தலைவரை இந்த நவீன காலம் இதுவரை கண்டதில்லை,'' என முன்னாள் பிரதமர் தேவ கவுடா, 92, விமர்சித்துள்ளார்.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் கடுப்பான அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரியும், அபராதமும் விதித்தார்.
இது குறித்து, மதசார்பற்ற ஜனதா தள தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவ கவுடா கூறியதாவது:
டிரம்பை போன்ற உறுதியற்ற, நாகரிகமற்ற மற்றும் பொறுப்பற்ற ஒரு நாட்டின் தலைவரை நவீன வரலாறு கண்டதில்லை.
இந்தியாவிடம் மட்டும் டிரம்ப் மோசமாக நடந்து கொள்ளவில்லை. அமெரிக்காவின் நீண்ட கால நட்பு நாடுகளுடனும் அவர் மோதல் போக்கை கடைப்பிடிக்கிறார். இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. உலகின் நான்காவது பொருளாதாரமாக முன்னேறி உள்ளது.
அப்படியிருக்கையில், நம் பொருளாதாரம் செத்து விட்டதாக டிரம்ப் எப்படி கூற முடியும்? இப்படி பேச ஒன்று, அவர் பார்வையற்றவராக இருக்க வேண்டும் அல்லது தகவல் அறியாதவராக இருக்க வேண்டும்.
பிரதமர் மோடியின் தலைமையில், தேச நலன் சமரசம் செய்யப்படவில்லை. டிரம்பின் மிரட்டல்களுக்கும் அடிபணியவில்லை. இனியும் அடிபணியாது.
இவ்வாறு அவர் கூறினார்.