நடிகை ஐஸ்வர்யா ராய் புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்த கோர்ட் தடை
நடிகை ஐஸ்வர்யா ராய் புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்த கோர்ட் தடை
ADDED : செப் 12, 2025 07:45 AM

புதுடில்லி; தனியுரிமை தொடர்பாக, நடிகை ஐஸ்வர்யா ராய் தொடர்ந்த வழக்கில், அனுமதியின்றி அவரது புகைப்படங்களை பயன்படுத்த தடை விதித்து, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதன் விபரம்:
என் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பல்வேறு நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு விளம்பரப்படுத்த, அனுமதியின்றி பயன்படுத்துகின்றன. மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக என் புகைப்படங்கள், 'மார்பிங்' செய்யப்படடு வணிக ரீதியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
எனவே, அனுமதியின்றி என் புகைப்படங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி தேஜாஸ் கரியா முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
தனி நபர்களின் புகைப்படங்களை, அவர்களது அனுமதியின்றி பயன்படுத்துவது, சமூக ஊடகங்களி ல் வெளியிடுவது, தனியுரிமையை மீறும் செயல்.
தனி நபர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும். அனுமதியின்றி பெயரையோ, புகைப்படத்தையோ வெளியாட்கள் பயன்படுத்துவதை தடுக்கும் உரிமை, தனி நபர்களுக்கு உள்ளது. இது வணிக ரீதியிலான பயன்பாட்டுக்கும் பொருந்தும். தனியுரிமை அடிப்படையில், புகைப்படம், பெயரை பயன்படுத்துவதற்கு அனுமதி தரவோ, மறுக்கவோ ஒருவருக்கு உரிமை இருக்கிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, நடிகை ஐஸ்வர்யா ராயின் கணவரும், பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சனும் மனு தாக்கல் செய்துள்ளார்.