நன்றியுணர்வு இல்லாதவர் மஹூவா மொய்த்ரா; திரிணமுல் எம்பி மீண்டும் தாக்கு
நன்றியுணர்வு இல்லாதவர் மஹூவா மொய்த்ரா; திரிணமுல் எம்பி மீண்டும் தாக்கு
ADDED : ஆக 05, 2025 08:30 PM

புதுடில்லி: ''மஹுவா மொய்த்ராவுக்கு நன்றியுணர்வு இல்லை. அவருக்கு ஆதரவாக பேசியதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,'' என்று லோக்சபா திரிணாமுல் காங்கிரஸின் தலைமை கொறடா பதவியை ராஜினாமா செய்த கல்யாண் பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்குவங்க முதல்வர் மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் எம்பியான மஹூவா மொய்த்ராவுக்கும், இன்னொரு எம்பியான கல்யாண் பானர்ஜிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் இருந்து வருகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிப் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் மம்தா இந்த பிரச்னையில் நேற்று சமரசம் செய்ய முயற்சித்தார். எம்பிக்களுக்குள் ஒருங்கிணைப்பு இல்லை என்று அவர், வீடியோ கான்பரன்சிங் கூட்டத்தில் கருத்து தெரிவித்தார். இதனால் வருத்தம் அடைந்த கொறடா கல்யாண் பானர்ஜி, தன்னை மம்தா குறை சொல்வதாக நினைத்து, கொறடா பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
இது குறித்த அறிவிப்பை சமூக வலைதளத்தில் பதிவிட்ட கல்யாண் பானர்ஜி மேலும் கூறியிருப்பதாவது:கடந்த 2023ம் ஆண்டில் மஹூவா மொய்த்ரா பார்லியில் விமர்சனத்திற்கு உள்ளானபோது நான் அவருக்கு ஆதரவாக பேசினேன். நான் அப்படி செய்தது, நம்பிக்கையின் பேரில் தான்; கட்டாயத்தின் காரணமாக அல்ல. அன்று நான் தெரிவித்த ஆதரவுக்காக, அவர் இன்று என்னை பெண் வெறுப்பாளர் என்று கூறியுள்ளார்.
அடிப்படை நன்றியுணர்வு இல்லாத ஒருவரைப் பாதுகாத்ததற்காக நான் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மக்கள் அவரது வார்த்தைகள் என்னவென்று பார்த்து அதற்கேற்ப தீர்ப்பளிக்கட்டும் என்று பார்லியில் பேசிய வீடியோவை பகிர்ந்துள்ளார்.