பெருவெள்ளத்தில் நம் வாகனங்களை காக்கும் சிறுதுளி பிரீமியம்!
பெருவெள்ளத்தில் நம் வாகனங்களை காக்கும் சிறுதுளி பிரீமியம்!
ADDED : ஆக 17, 2025 08:45 AM

புதுடில்லி: பருவ மழைக்காலங்களில் வாகன காப்பீடு கிளெய்ம் கேட்டு வரும் விண்ணப்பங்கள் எண்ணிக்கை, கடந்த இரண்டு ஆண்டுகளில் சராசரியாக 33 சதவீதம் அதிகரித்துள்ளது. மழை, வெள்ளத்தில் வாகனங்கள் சிக்கி செயலிழப்பதே இதற்கு முக்கிய காரணமாகிறது.
காப்பீடு சேவை வசதியை வழங்கும் 'பாலிசி பஜார்' இணையதளம் வெளியிட்டுள்ள தரவு, இதை தெரிவிக்கிறது. மேலும், அதில் கூறியிருப்பதாவது:
இருவகை காப்பீடு
கடந்த 2023 ஜூன் முதல் செப்டம்பர் வரை, வாகன காப்பீடு கிளெய்ம் சராசரி தொகை 30,000 ரூபாயாக இருந்தது. இது, தற்போதைய பருவ மழைக்காலத்தில் 40,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.
வாகன காப்பீட்டில், வாகனம் முழுமைக்கும் காப்பீடு, பகுதியளவு காப்பீடு என இரண்டு வகை திட்டங்களை காப்பீடு நிறுவனங்கள் வழங்குகின்றன. வாகன இன்ஜினுக்கு காப்பீடு செய்ய பிரீமியம் கூடுதலாக கட்ட வேண்டும் என்பதால், பலரும் இன்ஜினை காப்பீடு செய்வதில்லை.
ஆனால், மழை, வெள்ளத்தில் சிக்கும் வாகனங்களில் இன்ஜின் பழுதாக அதிக வாய்ப்புள்ள நிலையில், அதற்கான கிளெய்ம் கிடைப்பதில்லை. மழை தொடர்பான வாகன பழுதுகள் அதிகம் என்ற நிலையில், 20 சதவீத வாடிக்கையாளர்களே இன்ஜினுக்கும் சேர்த்து காப்பீடு செய்கின்றனர். வழக்கமான வாகன காப்பீட்டில், வெள்ளத்தில் சிக்கும் வாகனத்தின் இன்ஜின் செயலிழப்புக்கு, கிளெய்ம் பொருந்துவதுஇல்லை.
ரைடர் அல்லது ஆட் - ஆன் எனப்படும், ஒரு காப்பீடு பாலிசியில் கூடுதல் சேவையாக தேர்வு செய்து, அதற்கான கூடுதல் பிரீமியம் செலுத்தினால் மட்டுமே இதை பெற முடிகிறது. இது பலருக்கும் தெரியாததால், வாகனத்தில் அதிக செலவு கொண்ட இன்ஜினுக்கு கிளெய்ம் பெற முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர்.
மூழ்க வாய்ப்பு
வாகன காப்பீடு செய்யும்போதோ, புதுப்பிக்கும்போதோ, வெள்ளத்தில் தங்கள் வாகனம் சிக்காது எனக் கருதி, சிறிய கூடுதல் தொகையை செலவிடுவதை பலரும் தவிர்க்கின்றனர்.
ஆனால், தற்போது பெருநகரங்கள் முதல் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் கூட, குறுகிய நேரத்தில் அதிக மழை பொழிவுக்கு வாய்ப்புள்ளதால், வெள்ளத்தில் மூழ்கும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தங்கள் வாகனம் வெள்ளத்தில் சிக்கி, இன்ஜின் பழுது ஏற்பட்ட பிறகே, அதற்கான காப்பீடு செய்யாததை எண்ணி வாடிக்கையாளர்கள் மனம் வருந்துகின்றனர்; தங்கள் தவறை தாமதமாக உணர்கின்றனர்.
விருப்ப தேர்வல்ல
வாகன காப்பீடுதாரர்களில் 75 சதவீதம் பேர், சாலையோர உதவியை தேர்வு செய்கின்றனர். இதனால், மழை, வெள்ளத்தின்போது வாகனத்தை இழுத்துச் செல்லுதல், இருப்பிடத்திலேயே பழுது பார்ப்பு ஆகிய சேவைகள் கிடைக்கின்றன.
எனினும், வெள்ளத்தில் வாகனம் மூழ்கினால், பழுதாகும் இன்ஜினை சரிசெய்ய கூடுதல் செலவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, வாகன காப்பீட்டில் சில நுாறு ரூபாய் பிரீமியத்தை செலுத்த முன்வந்தால், மழைக்கால பாதிப்பின்போது பல ஆயிரம் ரூபாயை கிளெய்ம் பெற்று செலவை மிச்சப்படுத்தலாம்.
மேலும், காலநிலையை கணிக்க முடியாமல் மாற்றிவிட்ட சூழலில், பருவ மழைக்கால பாதிப்புகளுக்கு காப்பீடு செய்வது விருப்பத் தேர்வல்ல, அத்தியாவசியமானது.இவ்வாறு தெரிவித்து உள்ளது.