மம்தா போட்ட உத்தரவு; ஹிருத்திக் ரோஷன் பட வசூல் பாதிப்பு
மம்தா போட்ட உத்தரவு; ஹிருத்திக் ரோஷன் பட வசூல் பாதிப்பு
ADDED : ஆக 17, 2025 07:58 AM

மொழியை வைத்து தமிழக அரசு அரசியல் செய்யும் யுக்தியை, தற்போது பல மாநிலங்களும், அங்குள்ள எதிர்க்கட்சிகளும் பின்பற்ற ஆரம்பித்துள்ளன.
'பெங்காலி மொழி பேசும் சிறுபான்மையினரை வங்கதேசத்தவர் என, பா.ஜ., ஆளும் மாநிலங்கள் கைது செய்கின்றன' என, மேற்கு வங்க முதல்வரான திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி வருகிறார்.
பெங்காலி மொழிக்காக இப்போது ஒரு உத்தரவிட்டுள்ளார். 'மேற்கு வங்கத்தில் உள்ள, அனைத்து சினிமா தியேட்டர்களிலும், தினமும் ஒரு பெங்காலி திரைப்படம் கட்டாயம் திரையிடப்பட வேண்டும். அதுவும் மதியம் 3:00 முதல் இரவு 9:00 வரை நடக்கும் ஒரு ஷோவில், பெங்காலி படம் திரையிடப்பட வேண்டும்' எனவும் அரசு ஆணையிட்டுள்ளது.
'ஆனால், இப்படி தினமும் அதுவும், 'பீக்' நேரத்தில், பெங்காலி படம் திரையிட்டால், தியேட்டரில் கூட்டமே இருக்காது; நஷ்டம் தான் ஏற்படும்' என, திரைப்பட சங்கத்தினர் சொல்கின்றனர். ஆனால், தன் உத்தரவில் உறுதியாக உள்ளார் மம்தா.
இதனால், இரண்டு திரைப்படங்களுக்கிடையே பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஒன்று, பெங்காலி திரைப்படம், துாம்கேது இன்னொன்று ஹிந்தி திரைப்படமான, ஹிருத்திக் ரோஷன்- - கியாரா அத்வானி நடித்த, வார் 2 இந்த இரண்டு படங்களும் 14ம் தேதி ரிலீஸ் ஆனது.
ஹிருத்திக் ரோஷன் நடித்த படத்தை திரையிட, அதிக அளவில் தியேட்டர்கள், 'புக்' செய்யப்பட்டுள்ள நிலையில், மம்தாவின் உத்தரவு, வார் 2 படத்தை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. பெங்காலி திரையுலகமோ, மம்தாவின் உத்தரவை வரவேற்றுள்ளது. இந்த உத்தரவால், ஹிருத்திக் ரோஷனின் பட வசூல் குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.