சத்தீஸ்கரில் என்கவுன்டர்: நக்சல்கள் 10 பேர் சுட்டுக்கொலை
சத்தீஸ்கரில் என்கவுன்டர்: நக்சல்கள் 10 பேர் சுட்டுக்கொலை
ADDED : செப் 11, 2025 07:03 PM

ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் கரியாபந்த் மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் நக்சல்கள் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பல மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்த நக்சல் அமைப்பினரை, 2026ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி நக்சல் அமைப்பின் பல முன்னணி தலைவர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் சரண் அடைந்து விட்டனர்.
எஞ்சியுள்ள நக்சல்களை தேடும் பணி, சத்தீஸ்கர் மாநிலத்தில் தீவிரமாக நடக்கிறது. மெயின்பூர் வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து கோப்ரா, எஸ்டிஎப் உள்ளிட்ட பிரிவினர் அடங்கிய பாதுகாப்பு படையினர் அந்த பகுதியில் இன்று காலை முதல் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் இரு தரப்புக்கும் கடுமையான துப்பாக்கிச்சண்டை நடந்தது. இந்த சண்டையில் நக்சல்கள் 10 பேர் உயிரிழந்தனர். அதில் அந்த அமைப்பின் மூத்த தலைவரான மனோஜ் என்பவரும் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை பற்றிய தகவல் தெரிவிப்போருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து மோதல் நீடித்து வரும் நிலையில், அது முடிந்ததும் விரிவான அறிக்கை வெளியிடப்படும் என பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.