
ரியல் மனி கேமிங் தடையால் ஹைக் நிறுவனம் மூடல்
ம த்திய அரசின் ரியல் மனி கேமிங் தடை காரணமாக, 13 ஆண்டுகள் செயல்பட்டு வந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ஹைக்கை மூடுவதாக கவின் பார்தி மிட்டல் அறிவித்துள்ளார். முதலீட்டாளர் மற்றும் குழுவுடன் ஆலோசித்த பின்னர், ஹைக்கை மூடும் கடினமான முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்தியாவுக்கு வெளியே, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலிய சந்தையில் கவனம் செலுத்த இருப்பதாக கவின் தெரிவித்து இருந்தார்.
காகிதம், காகித பொருட்களுக்கு ஒரே ஜி.எஸ்.டி., விதிக்க கோரிக்கை
அ னைத்து காகிதம் மற்றும் காகித அட்டை தயாரிப்புகளுக்கு ஒரே மாதிரியாக 5 சதவீத ஜி.எஸ்.டியை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு காகித வியாபாரிகள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. காகிதத்துக்கு 18 சதவீதமும், பிற காகித தயாரிப்புகளுக்கு 5 சதவீதம் என மாறுபட்ட ஜி.எஸ்.டி., விதிக்கப்படுவதால், சிறு, குறு நிறுவனங்கள் தேவையற்ற அழுத்தத்தை சந்திக்க நேரிடுவதாக கவலை தெரிவித்து உள்ளது.
மீண்டும் வட்டி சமன்பாட்டு திட்டம் ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தல்
அ மெரிக்காவின் கடும் வரி விதிப்பு காரணமாக பாதிப்பை எதிர்கொள்ளும் ஏற்றுமதியாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும் என, பொறியியல் பொருட்கள் ஏற்றுமதியாளர்கள் ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ராவுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
கடந்த 2024 டிசம்பரில் நிறுத்தப்பட்ட வட்டி சமன்பாட்டுத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனவும், குறிப்பாக சிறு,குறு நிறுவனங்களின் உற்பத்திப் பிரிவுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தி உள்ளனர்.