அறிவுசார் சொத்துரிமை பதிவு செலவு ரூ.22 லட்சம் திரும்ப ஒப்படைப்பு
அறிவுசார் சொத்துரிமை பதிவு செலவு ரூ.22 லட்சம் திரும்ப ஒப்படைப்பு
ADDED : டிச 31, 2025 01:30 AM

சென்னை: 'தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம்', ஒன்பது அறிவுசார் சொத்துரிமைகளுக்கான செலவினத் தொகை, 22 லட்சம் ரூபாயை, திரும்ப ஒப்படைத்தது.
தமிழக உயர்கல்வித்துறையின் கீழ், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் இயங்கி வருகிறது. இதில், 'சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான அறிவுசார் சொத்துரிமை வசதி மையம்' செயல்பட்டு வருகிறது. இதன் சார்பில், காப்புரிமை, வர்த்தகக் குறியீடு, தொழில் துறை வடிவமைப்பு உட்பட, அறிவுசார் சொத்துரிமை பதிவுக்கு ஏற்பட்ட செலவுகளை, திரும்ப ஒப்படைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
முதல் கட்டமாக, ஒன்பது பயனாளிகளுக்கு, 22.49 லட்சம் ரூபாய் தொகையை திருப்பி வழங்கும் நிகழ்ச்சி, சென்னை தொழில்நுட்ப கல்வி இயக்கக வளாகத்தில், நேற்று நடந்தது. மன்ற உறுப்பினர் செயலர் வின்சென்ட், இதற்கான காசோலைகளை வழங்கினார். பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, புளியங்குடி எலுமிச்சை, சம்பா வத்தல் உட்பட, பல்வேறு பொருட்களின் புவிசார் குறியீடுகளுக்கான செலவினத் தொகை 12 லட்சம் ரூபாய், தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
கும்பகோணம் வெற் றிலை புவிசார் குறியீடுக்கான செலவினத் தொகை 1.92 லட் சம் ரூபாய், கோவையில் உள்ள, தமிழ்நாடு வேளாண்மை பல்கலையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்ற உறுப்பினர் செயலர் வின்சென்ட் கூறியதாவது:
தமிழகத்தில் 73 பொருட்களுக்கு, புவிசார் குறியீடுகள் கிடைத்துள்ளன. எங்கள் மன்றத்தின் வழியே, 15 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டது. அதில், தஞ்சாவூர் வெண்ணெய்; திண்டுக்கல் பூட்டு; கொடைக்கானல் மலைப் பூண்டு.
உடன்குடி பனங்கருப்பட்டி ஆகியவற்றுக்கு, புவிசார் குறியீடு கிடைத்துள்ளன. மற்றவை பரிசீலனையில் உள்ளன. அறிவுசார் சொத்துரிமை பதிவுக்கான செலவுகளை, திரும்ப ஒப்படைக்கும் திட்டம் முன்னோடியானது. அனைவரும் இந்த திட்டத்தில் பயன் பெற லாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

